4/2/14

பறவைகள் வி வடிவில் பறப்பது ஏன்?

  மில்டன் ஆஸ்லன், பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர். 'கூஸ்' என்ற வாத்து இனத்தைச் சார்ந்த பறவையைப் பற்றி அதிகம் ஆராய்ந்தவர். இந்தப் பறவை 'முட்டாள் பறவை' என்று அழைக்கப்படுகிறது. எதற்காக இப்படி அழைத்தார்கள் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

 இந்தப் பறவைகள் கூட்டமாகப் பறக்கும்போது எப்போதும் ஆங்கில 'வி' வடிவத்தில்தான் பறக்கும். ஏனென்றால்
தனித்தனியாகப் பறப்பதை விட 'வி ' வடிவத்தில் பறக்கிறபோது பறவைக் கூட்டத்தின் பறப்பு எல்லை அதிகமாகிறது.

 பறக்கும்போது ஒரு பறவை தவறுதலாக வடிவமைப்பிலிருந்து விலகிவிட்டால் அப்பறவை உடனடியாகத் தன்னுடைய பழைய இடத்துக்கு வராது. வடிவமைப்பின் பின்னால் போய் விடும். முன்னால் பறக்கும் பறவைகளின் உந்துசக்தியால் ஈர்க்கப்பட்டு இப்பறவையும் விரைவிலேயே வரிசைக்கு வந்து விடும்.

தலைவனாக முன்வரிசையில் பறக்கும் 'கூஸ்', எப்போதாவது சோர் வடைந்தால் கடைசி வரிசைக்கு வந்துவிடும். உடனே இன்னொரு பறவை தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும். கடைசி வரிசையில் பறக்கும் பறவைகள் அடிக்கடி ஆரவாரக் குரல் எழுப்பி மற்ற பறவைகளுக்கு உற்சாகம் ஊட்டும்.

 கூட்டத்தில் ஒரு பறவைக்குத் திடீரென உடல்நலம் கெட்டுவிட்டாலோ அல்லது வேட்டையாடுபவர்களால் குண்டடி பட்டுவிட்டாலோ அது வடிவமைப்பை விட்டுத் தன்னையறியாமலேயே விலக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

 உடனே என்ன நடக்கும் தெரியுமா? யாராலும் நம்ப முடியாத ஆச்சரியம் அது. இரண்டு பறவைகள் அந்த உடல்நலமற்ற குண்டடி பட்ட பறவையைப் பத்திரமாகக் கீழே தரைக்குக் கூட்டிக் கொண்டு வரும். அதனுடனேயே இருந்து அதற்கு உணவு அளித்து அந்த நோயாளியைப் பாதுகாக்கும். அந்தப் பறவையின் உடல்நிலை தேறும் வரை காத்திருந்து அதைத் தங்களுடன் கூட்டிக் கொண்டு போகும். அப்பறவை உடல் நலம் தேறாமல் இறந்து போனால் மறுபடியும் கூட்டத்துடன் அந்த இரண்டு பறவைகளும் வந்து சேர்ந்து கொள்ளும். இப்படி வானத்திலிருந்தும், வானத்தில் பறந்து செல்லும் பறவைகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்வதற்குக் கணக்கற்ற பாடங்கள் உள்ளன.
===========================================================
@வாழும்போதே வானைத் தொடு!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.