7/7/13

அன்பு மிகு என் தமிழ் சமூகமே.!

          எது தமிழ்த் தேசியம்?


 தலித்துகள் பிற சாதிப் பெண்களை போலிக்காதலில் ஏமாற்றுகிறார்கள் என்பதுவும் , இசுலாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதுவும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக நடக்கிறது. அரசுக்கு எதிராக மக்கள் திரும்பும் போது அவர்களுக்குள்ளாகவே அவர்களை எதிரிகளாக மாற்றுவது நடக்கிறது இந்தியாவில்..

 தலித்துகள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் 1000 வீடுகளை எரிக்கலாம், பொருட்களை எடுக்கலாம் என்று சொல்லி ஒட்டுமொத்த தலித்துகளை எதிரிகளாக அறிவிக்கலாம் என்றால்.
. இதே போன்றதொரு அறிவிப்பினை , கந்து வட்டி செய்து பலக்குடும்பங்களை அழிப்பவர்களை ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் சொல்லி அவர்களையும் ஒட்டுமொத்த சமூகத்தின் எதிரிகளாக அறிவிக்கலாமா?.. நாடகக் காதல் என்பதை விட அதிகம் பாதிக்கப்பட்ட்து கந்துவட்டியில் தானே?.... கொங்கு மண்டலப்பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக அடிக்கடி கேள்விப்படும் நிதி மோசடிகளை செய்வது என்ன சாதி என்று அறிந்து அவர்களையும்ஒட்டுமொத்த தமிழர்களின் விரோதிகளாக அறிவிக்கலாமா”..

 வெள்ளைக்காரன் ஒரு சில சாதிகளைகுற்றப்பரம்பரையாகஅறிவித்ததற்கும் இன்று தலித்துகளை குற்றவாளிகளாக அறிவிப்பதற்கும் என்ன வித்தியாசம்?... இது சரியென்றால் அதுவும் சரியா?...

  ஒருசிலர் (தலித்களாக இருப்பதற்காகவே) மீது இருக்கும் விமர்சனத்திற்கு ஒட்டு மொத்த தலித்தினையும் பழிவாங்கலாம் அல்லது தாக்கலாம் என்றால், இதே அளவுகோளினை தமிழரை காட்டிக்கொடுத்த தலித் அல்லாத பல்வேறு கட்சிகளினை சார்ந்தவர்களின் சாதியையும் அவ்வாறான ஒட்டுமொத்த குற்றச்சாட்டிற்கு நாம் ஏன் உட்படுத்தவில்லை

 நாமக்கல்லில் கல்வியினை பிராய்லர்கோழிப் பண்ணையாக மாற்றி குழந்தைகளின் எதிர்காலத்தினை கெடுப்பவர்களையும், கிராணைட் கல் எடுத்து சூழலை அழித்தவர்களின் சாதியையும், ஆற்றில் மண் எடுத்து தண்ணீர் ஆதாரத்தினை அழித்தவர்கள் சார்ந்திருந்த சாதியையும், திருப்பூர்-ஈரோட்டில் பவானி, நொய்யலினை சாயப்பட்டரை சாக்கடையாக மாற்றியவர்களின் சாதிகளையும் ஆராய்ந்து அவர்களை தமிழரின் எதிரியாக அறிவிக்கலாம் இல்லையா?.... இவர்களை விடவா நாடகக் காதல் என்று நீங்கள் சொல்வது இன்று ஆகப்பெரும் ஆபத்தாக வந்து நின்றது?...

 தண்ணீரை தனியார் மயப்படுத்தும் மசோதா வந்திருக்கிறது…. இது அனைத்து சாதிக்கும் எதிரானதுதான்.. ஏன் இது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் எதிரானதாக இந்த பாமக உள்ளிட்ட தலித்துகளுக்கு எதிரான கூட்டமைப்பினால் அறிவிக்கப்படவில்லை.?....
மின்சாரத்தினை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கவும், தனியார் நிறுவனங்களுக்கு மின் உற்பத்திக்கான அனுமதியை வழங்கி இன்னும் 3 வருடங்களில் 5 மடங்கு மின்கட்டனம் அதிகரித்து ஒட்டுமொத்த சாதிகளும் மிக அதிகமான கட்டணத்தினை கட்டவேண்டும் என்பது நடக்கிறதுஇதில் எதாவது தலித்துகளுக்கு சலுகையாக கிடைக்கிறது என்பதற்காக போராட்டம் நட்த்துகிறீர்களா?.. அல்லது அனைத்து தலித் அல்லாத சமூகத்திற்கு இந்த கட்சிகள் ஒன்றாக கூடி சலுகைகள் வாங்கி தரப்போகிறீர்களா?...

 விதைச் சட்டம் வருகிறது , மரபணு விதைச் சட்டம் வருகிறது. இதைப்பற்றியெல்லாம் பாமக பேசி இருக்கிறது, ஆனால் ஏன் இதற்கு எதிராக மக்களை அணி திரட்டவில்லை?... ஏன் இது தமிழ்ச் சமூகத்தின் ஆகப்பெரும் ஆபத்து என்று அறிவித்து கூட்டமைப்பினை உருவாக்கவில்லை?....

 வன்னியச்சமூகம் ஆகப்பெரும் விவசாயச் சமூகம் இது இந்த தண்ணீர்-மின்சாரம்-விதை மசோதாக்களால் பாதிக்கப்பட போகிறது. இதை விடவாநாடகக் காதல்முன்ன்னிப் பிரச்சனை உங்களுக்கு?... சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை சமூகப் பிரச்சனையாக மாற்றுகிறீர்கள். சமூக-பொருளாதாரப் பிரச்சனையை என்னவாக கையாண்டு இருக்கிறீர்கள்.. இந்த மசோதாக்கள் நீங்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தபோது வந்த்து தானே?.. எங்களைவிட உங்களுக்கு தெரியாதா என்ன?

  ”தானே புயல்சீரழிவிற்கு மத்திய அரசு உதவித் தொகை வழங்கவில்லைஇந்த அணி திரட்டல் மற்றும் அனைத்து இயக்கங்களுக்கு தலைமை வழங்கி இந்திய அரசிற்கு எதிராக போராட்டம் நடத்த , (இப்பொழுது அழைப்பது போல) ஏன் யாருக்கும் அழைப்பு விடப்படவில்லை?...

 இன்று நீங்கள் ஒட்டுமொத்த தலித்திற்கு எதிராக திரட்டப்படும் மக்கள் திரட்டல், கருத்து பிரச்சாரத்தினை இவற்றிற்கு எதிராக அறிவித்து எங்கள் அனைவரையும் திரட்டி இருக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த சமூகமும் உங்கள் பின் நின்று இருக்குமே?... அப்படி திரட்டி இருந்தால்நீங்கள் சொல்லும் நாடகக் காதல்உட்பட அனைத்து சமூக பிரச்சனையையும் அனைவரும் சேர்ந்தே எதிர்கொண்டு இருக்கலாமேஒட்டுமொத்த சமூகத்தினையும் ஒன்றாக்கி அதற்கான போராட்டத் தலைமையை தர மறுத்தது யார்?.... இச்சமூகத்தினை யார் இன்று உடைத்திருக்கிறார்கள்

 நீங்கள் நாடக காதல் பிரச்சனையை வைத்த காலங்களில் தான் இதற்கான மசோதாக்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.

 தலித்துகள் இன்று அதிகாரத்தில் பெரும்பங்கெடுத்த சமூகம் இல்லை. அதிகாரவர்க்கத்திலும் பெரும்பான்மை சமூகமாகவும் இல்லை. ஆகப்பெரும் பொருளாதார பலம், நிலவளம் பெற்றவர்களாக இல்லை என்கிற போது , இம்மசோதாக்களில் இவர்களின் பங்கு என்பது இல்லாமல் இருக்கும் போது , இந்த ஆபத்துகளை வன்னியர் உட்பட அனைத்து உழைக்கும் மக்களுக்கு தூக்கு கயிராக கொண்டு வந்த தலித் அல்லாத பிற சமூகங்கள் உங்களுக்குநண்பர்கள்”, தலித்துகள்எதிரிகள்என்றால் நீங்கள் யாருடன் நிற்கிறீர்கள் என்பது புரியாமல் இல்லை….

 ஒரு சமயத்தில் வன்னியர் மட்டுமல்லாமல் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகள், ஏன் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள், இசுலாமியர் என அனைத்து விளிம்பு நிலை மக்களும் உங்களுடன் நிற்க தயாராக இருந்ததை இன்று நீங்களே உடைத்து இவர்களை ஒருவருக்கு ஒருவர் எதிரியாக மாற்றி இருக்கிறீர்கள்பின் நவினத்துவவாதிகள் ஏகாதிபத்தியத்திற்கும் , இந்தியத்திற்கும் எடுபிடி அரசியல் கருத்தாங்களை அரசியல் செயல்பாட்டு தளத்தில் விதைத்து இச்சமூகத்தினை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு நகர்த்தி ஏகாதிபத்தியமும், உலக வங்கியும் வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்று நிரூபித்திருக்கிறீர்கள்.

 நீங்கள் வன்னியர்கள் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் வந்திருக்கின்ற அடிப்படையான வாழ்வாதாரப் பிரச்சனைகளில் இருந்து அனைவரையும் திசை திருப்பி இன்று இந்திய அரசிற்கு உதவி செய்திருக்கிறீர்கள் என்பது தான் துயரமான உண்மை.

 உழைக்கும் பாட்டாளிச் சமூகத்தினை இரண்டு கூறுகளாக பிரித்திருக்கிறீர்கள். இது யாருக்கு லாபம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இன்று நடக்கும் அணி திரட்டல் இவர்களை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக அல்ல.. இருவரையும் ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத்திற்கும் , அது நடத்தும் போலி சனநாயகத்தின் மூலமாக இவர்கள் நிலங்களும், சூழலும், வாழ்வாதரங்களும் பலியிடப்படுவதற்கே...

 ஒரு சமயத்தில் எங்களுக்கு ஆதரவாய் களத்தில் நின்ற கட்சிகள் இந்திய தேர்தலுக்காக இன்று எங்களுக்கு எதிராக நிற்பதுவே எங்களின் ஆகப்பெரும் துயரம்.

   2011 மூவர் தூக்கிற்காக செங்கொடி தியாகத்திற்கு ஒரே மேடையில் திரண்ட தமிழர் தலைவர்கள் - பரமகுடி துப்பாக்கி சூட்டில் அரசு உடைத்தது.

 2012 நவம்பர்- லண்டனில் தமிழீழ படுகொலைக்கான அனைத்து கட்சி மாநாடு - ஒரே மேசையில்டி.ராஜா, தா.பா, திருமா, ஜிகே மணி, கிருஸ்ணசாமி, அய்ய நாதன், விடுதலை ராஜேந்திரன், உள்ளிட்டவர்கள்நின்ற காலத்தில் - தர்மபுரி நாயக்கன் கொட்டாய்.

   2013 . நா விவாதம், காவேரி பிரச்சனை, விவசாயிகள் மரணம், - சாதிப் பிர்ச்சனையின் இரண்டாம் கட்டம் மதுரையில், பரமகுடியில்.

  2013 ஜூலை , நெய்வேலி என் எல் சி பிரச்சனை அனைத்து சமூக மக்களும், ஊர் கிராம மக்களும் திரண்டு போராட்டம் நடத்தும் அதே தினத்தில் இளவரசன் கொலை..

 ஒன்றாய் திரள திரள நாம் மேலும் மேலும் உடைக்கப்படுகிறோம்... சாதியாய் தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட முடியாது. சுயசாதி விமர்சனமற்று சமூக நீதியை பேச முடியாது.  

கருத்துகள் இல்லை: