7/7/13

மேட்டூர் அணை



மேட்டூர் அணை நீரில் மூழ்கிய
 
ஊர்களின் சோக வரலாறு
மேட்டூர் அணை, தமிழகத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. இந்த அணையை நம்பித்தான் தமிழகத்தில் நெற்களஞ்சியமே இருக்கிறது. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக இப்போது, தண்ணீர் வறண்டுபோய் அணைக்குள் மூழ்கிய பல ஊர்களும், அவற்றில் மிஞ்சியிருக்கும் கட்டிடங்களும் வெளியே தெரிகிறது. இந்த அணை எங்கே எபப்டி உருவானது. இந்த அணைக்குள் இருந்த கிராமங்கள், அந்த கிராமங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை என்னவானது? போன்றவற்றை பார்க்கும் ஒரு விரிவான கட்டுரை தான் இது.


 சேலம் மாவட்டத்தின் வடமேற்கு ஓரத்திலிருந்த சாம்பள்ளி என்ற ஊருக்கு அருகில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். சாம்பள்ளி என்ற ஊர்தான் அணைக்குள் மூழ்கியிருக்கும் ஊர்களிலேயே பெரிய ஊராகும். அங்கிருந்த மக்கள் தான் இப்போது உள்ள மேட்டூரில் வந்து குடியேறியவர்கள். இந்த அணை, 1925-ல், தொடங்கி 1934-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்ட போது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப் பெரிய அணையாக விளங்கியது. இந்த அணை ஒரு நூற்றாண்டு கால போராட்டத்துக்கு பிறகுதான் கட்ட முடிந்துள்ளது.

 1801-ஆம் ஆண்டு இதியாவை ஆண்டுவந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய வர்த்தகசபை மேட்டூரில் அணைகட்டுவதற்கு முயன்றது. பிரிட்டிஷ் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு ஆட்சி நடத்திய மைசூர் சமஸ்தானம் இதற்கு கடுமையான ஆட்சேபணைகளை எழுப்பியபடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835-ஆம் ஆண்டு, மேட்டூரில் அணை கட்டுவதற்காண சம்மதத்தை பெற “சர் ஆர்தர் காட்டன்” என்ற பொறியாளரை மைசூருக்கு தூதுவராக அனுப்பிவைத்தது ஆங்கிலேய அரசு. அப்போதும் மைசூர் சமஸ்தானம் இதை எதிர்த்ததால் முயற்சி கைவிடப்பட்டது.

 1923-ல் திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் உள்ள திவான்பகதூர் “சர்” சி.பி.ராமசாமி அய்யரிடம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் அணை கட்டுவதன் அவசியத்தை எடுத்து விளக்கினர். அவர் மைசூர் சமஸ்தானத்தை அணுகி “திவான்பகதூர்” விஸ்வேஸ்வரய்யா என்பவரிடம் இது குறித்து எடுத்துரைத்தார். இம் முயற்சிக்கு சி.பி.ராமசாமி அய்யர் தலையிட வேறு ஒரு காரணமும் உண்டு. சர்.சி.பி.ராமசாமி அய்யரின் முன்னோர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களே. சர்.சி.பி.ராமசாமி அய்யரின் உறவினர்கள் பலர் தஞ்சை மாவட்டத்தில் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மன்னர் மானியமாக பெற்று பல தலைமுறைகளாக அந்த நிலத்தை அனுபவித்து வந்தார்கள். இந்த காரணத்தால் தான் சர்.சி.பி.ராமசாமி அய்யர் மேட்டூர் அணை கட்டுவதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்று அப்போதைய குடியரசு இதழில் தந்தை பெரியார் எழுதியுள்ளார்.

  அணை கட்டும் திட்டத்துக்கு மைசூர் சமஸ்தானத்தார் மீண்டும், மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இத்திட்டம் அப்போதும் கைவிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு, தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து புயல் காலங்களில் கட்டுக்கடங்காமல் வரும் காவேரி ஆற்றுத்தண்ணீரால் தங்களுடைய பயிர்களுக்கு ஏற்படும் வெள்ளச்சேதங்களுக்கு இழப்பீடாக ஆண்டு தோறும் 30,00,000/- ரூபாய் இழப்பீடாக மைசூர் சமஸ்தானத்தார் தஞ்சை விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சிதலைவர் மூலம் மைசூர் சமஸ்தானத்திற்கு “நோட்டீஸ்” கொடுத்தனர். (அன்றைய தேதிக்கு ஒரு பவுன் விலை ரூ.30/-மட்டுமே, அதன்படி கணக்கிட்டால் ரூ.30,00,000/-க்கு 1 லட்சம் பவுனாகிறது )

  வருடா வருடம் ரூ.30,00,000/-கொடுப்பதைக் காட்டிலும், மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதம் கொடுப்பதே சிறந்தது என திருவாங்கூர் சமஸ்தான திவான் பகதூர் சர்.சி.பி.இராமசாமி அய்யர் எடுத்துக்கூறி மைசூர் சமஸ்தானத்தை அணை கட்ட சம்மதிக்கவைத்து சம்மதக்கடிதம் பெற்று அதை தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைக்க வைத்தார்.

  அணை கட்டுவது குறித்த திட்ட ஆய்வு பணி 1905-ல் துவங்கி 1910-வரை நடந்தது. இப்போது உள்ள மேட்டருக்கு சற்று தெற்கே உள்ள செக்கானூர் என்ற இடத்தில் மேற்கே உள்ள பாலமலைக்கும் கிழக்கே உள்ள கோணநாயக்கன்பட்டி அருகில் உள்ள வனவாசி மலைக்கும் இடையே அணை கட்ட ஆங்கிலேய பொறியாளர்கள் முடிவு செய்தனர். ஆனால், அதில் இப்போது உள்ளதைக்காட்டிலும் கூடுதலான நீரை சேமிக்க முடிந்தாலும், அதில் ஆபத்து அதிகம் இருப்பதாக கருதி, இறுதியில் அதை கைவிட்டு விட்டு  சாம்பள்ளியில் (மேட்டூரில்) அணை கட்ட முடிவு செய்து, 1924-மார்ச் 31-ம் தேதி இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து அரசின் ஒப்புதலுக்கு திட்ட அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். அதே ஆண்டு, டிச.11-ம் தேதி அரசு அணை கட்ட அனுமதி வழங்கியது. (இன்றைய இந்திய அரசை கட்டிலும் வேகமாக செயல்பட்டுள்ளது ஆங்கிலேய அரசு).

  அதன்படி, 1925 ஜூலை 20-ம் தேதி மேட்டூர் அணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறியாளராக “கர்னல்” வில்லியம் மார்க் எல்லீஸ் என்பவரும்,  நிர்வாக பொறியாளராக வெங்கட்ராமையர், முதன்மை தலைமை பொறியாளராக முல்லிங்க்ஸ் என்பவர்கள் தலைமையில் 24 பொறியாளர்கள் அடங்கிய குழு அணை கட்டும் பணியை தொடங்கியது.

 மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டு காலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 1934-ம், ஆண்டு ஜூலை 14-ம் தேதி கடைசி கல் வைக்கப்பட்டு கட்டுமானப் பணி நிறைவு பெற்றது.

  அணையின் மொத்த நீளம் 1,700 மீட்டர்களாகும்.(5,325,அடி) அனையின் உயரம் 120 அடிகள். மேலும் இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி.(டி.எம்.சி என்பது தவுசன் மில்லியன் கியூபிக்)  ஒரு டி.எம்.சி என்பது 100 கோடி கனஅடி தண்ணீராகும். 124 அடி உயரமுள்ள அணையில், நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி. அனையின் முழு கொள்ளளவான 124 அடிக்கு 9,347. கோடி கனஅடி தண்ணீர் (93.4 டி.எம்.சி) தேக்கி வைக்கப்படுகிறது. தண்ணீர் நிறைந்திருக்கும் அனையில் 1 டி.எம்.சி.அளவு தண்ணீர் குறைந்தால், அணையில் 1.25 அடி தண்ணீர் உயரம் குறையும். 1 அடி தண்ணீர் குறைந்தால் 0.75 டி.எம்.சி. அளவு குறையும்.


 
















  




  










       இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதி கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, மைசூரு, சாம்ராஜ் நகர்,மாண்டியா மற்றும் தமிழகத்தின் ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் உள்ள

  வனப்பகுதி களில்  சுமார்-16,300 சதுரமைல் அளவில் பறந்து விரிந்து உள்ளது. இந்த பகுதியில் மழைபெய்யும் போது வழிந்தோடி வரும் தண்ணீர் இந்த அணையில் 65 சதுர மைல் நிலப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதுவரை அதிக அளவாக 1924ம் ஆண்டு 4,56,000, கனஅடிதண்ணீர் வெள்ளமாக வந்துள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அதிகபட்சம் 2,60,000 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.

இந்த அணையின் அடித்தளம் கடல் மட்டத்திலிருந்து, 586  அடி உயரத்தில் ஆரம்பிக்கிறது, 791, அடி உயரத்தில் முடிகிறது. மொத்தம் 205 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதில் நாற்பது அடி அகலத்தில், நூற்றைம்பது அடி உயரத்துக்கு இரும்பு தூண்கள் மூலம் இணைக்கப்பட்ட தண்டவாளங்கள் நிறுத்தி அணை கட்டப்பட்டுள்ளது. 171 அடி அகலத்தில் ஆரம்பிக்கும் அணையின் கீழ் தளம், மேலே வர வர குறைந்து கொண்டே வந்து கடைசியில் 12 அடி அகலம் மட்டுமே உள்ளதாக அமைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதன் கிளை நதிகளாக கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதை தாண்டி, 1904 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாய்கால் மூலம் பாசன வசதியை கொடுக்கிறது இந்த அணை. அணையை கட்டி முடிக்க அப்போது, ஆன செலவு ரூ.4.80 கோடியாகும். இதன் மூலம் பாசன வசதியை பெரும் வகையில் அமைக்கப்பட்ட வாய்க்கால் மற்றும் ஆறுகளை அமைக்க ஆன செலவு ரூபாய் இரண்டு கோடி.

 அப்போதைய, சென்னை மாகாண கவர்னர் “ஜான் பெடரிக் ஸ்டான்லி” 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி பாசனத்திற்கு நீரை திறந்து வைத்து, அணையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஆளுநர் ஸ்டான்லியின் பெயரையே அணைக்கும் சூட்டி, “ஸ்டான்லி” நீர்த்தேக்கம் என பெயர் வைத்தனர்.

 அணை கட்டுவதற்கு முன்னர் தஞ்சை மாவட்டத்தில் 3,01,000 (மூன்று இலட்சத்து ஒரு ஆயிரம்) ஏக்கர் நிலப்பரப்பிற்கு மட்டுமே பாசனவசதி கொடுத்துவந்த இந்த காவேரி, இப்போது, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், துறையூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டனம், கடலூர், என மொத்தம் 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை கொடுக்கிறது.. மொத்தம் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் நீர்த்தேக்க வளாகத்திலேயே 240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நீர்மின் நிலையமும் உள்ளது.

 மேட்டூர் அணையை மூன்று முறை மின்னல் தாக்கியது. இருப்பினும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேட்டூர் அணை 75 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதியை பவள விழாவாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பவள விழா ஆண்டை முன்னிட்டு, மேட்டூர் அணை வலது கரையில் லிப்ட் வசதியுடன் கூடிய 75 அடி உயர கோபுரம் கட்டப்படுகிறது. அதன் அருகில் அணை வரலாறு தொடர்பான புத்தகங்கள் அடங்கிய நூலகம், மற்றும் ஆய்வரங்கம் கட்டப்படுகிறது. மேட்டூர் அணை கட்டடத்தில் “ஸ்டான்லி” அணை என்று பெரிய அளவில் இரவிலும் ஒளிரும் வகையில் எழுத்துக்கள் வடிவமைக்கப்படுகிறது. மேட்டூர் அணை பூங்கா நுழைவாயிலில் பவளவிழா நினைவுத் தூண் ஒன்றும் கட்டப்படவுள்ளது.

 தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் தஞ்சை மாவட்டத்துக்கு தேவையான தண்ணீரை கொடுக்கும் இந்த அணை இன்றைய தமிழர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்த அணைக்குள் மூழ்கிப்போன பல ஊர்களில் இருந்த மக்கள் தங்கள் நிலபுலன்களையும், வீடு வாசல்களை இழந்துள்ளனர். அணையில் மூழ்கிய கிராமங்களும், அங்கிருந்த  கோயில்களும் இப்போது, தண்ணீர் குறைந்து விட்டதால் வெளியே தெரிகின்றது. “ஸ்டான்லி” அணைக்குள் மூழ்கிப்போன கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு, அணையை ஒட்டிய மலைப்பகுதிகளில் மாற்று நிலத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது. கர்நாடக மாநிலம், செங்கப்படி, ஆலாம்பாடி, ஆத்தூர், கவுதள்ளி, மாடால்லி, நல்லூர், தோமையார்பாளையம் போன்ற தமிழர்கள் வசிக்கும் கிராமங்கள் எல்லாமே மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, தண்ணீரில் மூழ்கிய பகுதியிலிருந்து குடிபெயர்ந்து போனவர்கள்தான். இப்படி தண்ணீரில் மூழ்கிய ஊர்களில் பெரியது சாம்பள்ளி என்ற ஊராகும், இந்த ஊர் மக்கள் தான் இப்போது இருக்கும் மேட்டூரில் நேரடியாக வந்து குடியேறியவர்கள். இந்த ஊர் அணைக்கு மிக அருகில் காவேரி ஆற்றோரம் இருந்துள்ளது. அதனால், இந்த ஊரின் மிச்சம் சொச்சம் எதுவுமே வெளியில் தெரியாது. இப்போதய அளவுகளின் படி ஊருக்கு மேலே இருபது அடிக்கு சேரும் சகதியும் இருக்கும் என்கிறார்கள்.

 இது தவிர கிறித்துவர்கள் அதிகமாக வாழ்ந்த நியாம்பாடி என்ற ஊர் முக்கியமான ஊர் ஆகும். இந்த ஊருக்கு வடக்கு பக்கமாக காவேரி சென்றுள்ளது. சுமார் ஐநூறு வீடுகளுடன் இந்த ஊரில் குழந்தை இயேசு தேவாலயம் இருந்துள்ளது. நூறு அடி உயரத்தில் இரட்டை கோபுரங்களுடன் கம்பீரமாக இருந்த இந்த ஆலயத்தின் கோபுரம் இப்போது வெளியே தெரிகிறது. அந்த கோபுரத்தில் இருபது அடி ஆழம் சேற்றில் மூழ்கியுள்ளது. மீதி அறுபது அடி உயரம் இப்போதும் உள்ளது. அதற்கு மேலே இருந்த சுமார் பத்தடி உயரமுள்ள கோபுரம் கடந்த 1996-ம் ஆண்டு வரை முழுமையாக உடையாமல் இருந்தது. அந்த கோபுரத்தின் உச்சியில் இரண்டு சிலுவைகள் முதலில் வெளியே தெரிந்து வந்தது. இப்பொழுது மீனவர்கள் மீன் பிடிக்க பரிசலில் செல்லும் போது, பரிசல் சிலுவையில் பட்டு கிழிந்து விடுகிறது என்பதாலும், மீனவர்கள் வீசும் மீன் வலை சிலுவையின் நுனியில் சிக்கிக்கொள்கிறது என்ற காரணத்தினால், சிலுவையும், அதை தாங்கியிருந்த செங்கல் கட்டிடத்தின் பீடத்தையும் அடித்து உடைத்து கோபுரத்தை மொட்டையாக்கி விட்டார்கள்.

 அணை கட்டி முடிக்கப்பட்டதும், நியாயம்பாடிக்கு பக்கத்தில் இருந்த காவேரிபுரம் என்ற ஊர் மக்கள் ஊரை காலி செய்துவிட்டு வெளியே சென்று அதே பெயரில் ஒரு ஊரை அமைத்துகொண்டனர். ஆற்றுக்குள் இருந்த காவேரிபுரத்திலிருந்த ஜலகண்டேஸ்வார் கோவிலின் சாமி சிலையை அப்படியே கொண்டுவந்து புதிதாக ஒரு கோயிலை கட்டிவிட்டனர். தண்ணீரில் மூழ்கிய ஜலகண்டேஸ்வரர் கோவிலும், அதற்கு முன்பாக உள்ள நாற்ப்பது அடி உயரமுடைய நந்தி சிலையும், இப்போது முழுமையாக வெளியே தெரிகிறது. இந்த ஊருக்கு வடக்கே கோட்டையூர் என்ற ஊரில், ஒரு கோட்டையும் இருந்துள்ளது. இந்த கோட்டை மைசூர் இராஜ்யத்தின் கிழக்கு எல்லையாக இருந்த இந்த ஊரில் பாதுகாப்பு, வரி வசூல் நடவடிக்கைகளை கவனிக்கும் அதிகாரிகள், அவர்களது குடும்பமும் இருந்துள்ளனர். அணையில் மூழ்கிப்போன இந்த கோட்டையின் இரண்டு வாயில் சுவர்கள் மட்டும் இப்போது வெளியே தெரிகிறது.

 இதுபோலவே, காவேரி ஆற்றின் கிழக்கு கரையில் சோழப்பாடி என்ற ஊரில் வீரபத்திரன் கோயில் மிக உயரமானதாக அமைந்துள்ளது. இப்போது, அந்த இடத்தில் ஒரு ஊர் இருந்தது, அங்கு மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு அடையாளமாக வீரபத்திரன் கோயிலின் மேல் பாதி மட்டும் நிறைந்துள்ள சேத்துக்கு மேலே தெரிகிறது. கோயிலின் கோபுரம் வரை வண்டல் மண்ணும், சேரும்  மூழ்கியுள்ளது. இங்கிருந்த வீரபத்திரன் கோவில், தருமபுரி மாவட்டம், பூச்சியூர் அருகில் உள்ள ஏர்கோல்பட்டி என்ற இடத்தில் கொண்டுபோய் கோவில் கட்டியுள்ளனர் அந்த ஊரின் பெயரும் சோழப்பாடி.

 இதற்கு கொஞ்சம் கிழக்கு பக்கத்தில், ஒரு கோட்டை இருந்துள்ளது. இந்த பகுதி மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக அந்த கோட்டை இருந்துள்ளது. சுமார் ஐந்து ஏக்கர் பரப்பில் விரிந்து கிடந்த அந்த கோட்டையில் இப்போது, இரண்டு கண்காணிப்பு கோபுரங்கள் மட்டுமே கொஞ்சம் மீதமுள்ளது. மீதி எல்லாமே இடிந்தும், கரைந்தும் போய் மண்ணோடு மண்ணாகிவிட்டது. கோட்டை இருந்த இடத்தில், இப்போது எள்ளுச்செடி விதைத்துள்ளனர்.

 பழைய வரலாறுகளை ஓரளவுக்கு தெரிந்த மக்கள் சுமார் அறுபது ஊர்கள் இந்த அணையின் தண்ணீருக்குள் மூழ்கி இருப்பதாக சொல்கிறார்கள். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து இப்போது, அணையின் சுவர் இருக்கும் சாம்பள்ளி வரை கிழக்கும் மேற்குமாக நெளிந்தும், வளந்தும் ஓடி வந்த காவேரி ஆற்றின் இரு கரையிலும் இருந்த வளமான நிலங்களில் விவசாயம் செய்து பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தங்களது முன்னோர்கள் அணை கட்டி முடிக்கப்பட்டதும், தங்கள் வீட்டில் இருந்த தானியங்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு, கால் நடைகளை கையில் பிடித்துக்கொண்டு அகதிகளாய் வெளியேறியிருக்கிறார்கள்.

 அப்படி வெளியேறி, இப்போதும், அணையின் இருகரையிலும் இருக்கும் பெரும்பாலான மக்கள் ஆடு மாடுகளை மேய்த்துதான் உயிர் வாழ்கிறார்கள். சிலர் ஆற்றில் இறங்கி மீன் பிடித்து வாழ்கிறார்கள். இங்குள்ள மக்களுக்கு நிரந்தரமான வருமானத்துக்கு இப்போதும் சரியான வழியில்லை.

 கம்பு, இராகி, சோளம், திணை, சாமை என எங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை பல ஆண்டுகளுக்கு சேரையில் பாதுகாத்து வைத்து தேவைப்படும் போது எடுத்து சமைத்து சாப்பிடுவோம் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள், இப்போது அந்த சேரையில் வைப்பதற்கு எங்களிடம் எந்த தானியமும் இல்லை, அன்றாடம் காய்சிகளாக சந்தையில் வாங்கி சாப்பிடுகிறோம், அணையில் தண்ணீர் வற்றிய காலங்களில் மட்டும், வெளியே தெரியும் எங்கள் நிலங்களில் போய் ராகி, கம்பு சோளம் போன்ற தானியங்களை விதைத்து, அவசர அவசரமாக அணையில் தண்ணீர் வந்து விளைந்த பயிர்களெல்லாம் தண்ணீரில் முழுகிப் போவதற்குள்ளாக அறுவடை செய்துகொண்டு வருவதாக சொல்லும் கூணாண்டியூர் வீரையன் என்ற பெரியவர், தானியம் கொட்டிவைத்து பலவருடங்கலான தன் வீட்டின் முன்பாக உள்ள சேரையை திறந்து காட்டுகிறார்.

 காவேரிபுரம், நியாயம்படி போன்ற ஊர்களில் நில, புலன்களுடன் வசதியாக வாழ்ந்த எங்கள் குடும்பமெல்லாம் அணை தண்ணீரில் மூழ்கியபோது, எங்கள் முன்னோர்கள் பக்கத்திலிருந்த கரடுகளில் போய் குடிசை போட்டுள்ளனர். அதற்கு பிறகு எங்களுக்கு போக்கிடம் இல்லாமல் போனதால், நாங்கள் இப்போதும், அந்த இடத்திலேயே குடியிருந்து கொண்டு மீன் பிடித்தும், விறகு வெட்டியும், ஆடு மாடுகள் மேய்த்தும் இந்த பகுதியிலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். மூழ்கிப்போன எங்கள் ஊருக்கு உங்களைப்போல பார்க்க வரும்  ஆட்களுக்கு பரிசல் ஒட்டி காசு வாங்கி வருகிறோம் என்கிறார் பன்னவாடி பரிசல் துறையில் பரிசல் ஓட்டும் மாதேஸ்வரன்.

 மேட்டூர் அனையின் வரலாற்றின் பின்னணியில், அந்த அணைக்குள் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களின் பறிபோன வாழ்க்கையின் சோகங்களும் அடங்கியுள்ளது.

  Thanks –கட்டுரை, படங்கள்; பெ.சிவசுப்ரமணியம்.
  @  http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=209



5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிக நன்றாக உள்ளது.....

Yesuraj சொன்னது…

Nice post... My ancestor from Mettur.... I am from Natrapalayam, Martalli.

பிரபஞ்சன்.க சொன்னது…

நன்றி ஜேசுரஜ்.

பிரபஞ்சன்.க சொன்னது…

நன்றி நண்பா.

Ranga சொன்னது…

good work