1/7/13

இலவச மருத்துவம் குடிமகனின் அடிப்படை உரிமை.

இலவச மருத்துவம் குடிமகனின் அடிப்படை உரிமை.
====================================================================
  இன்று நம் நாட்டினிலே மருத்துவம் என்றாலே ஒரு பணம் கொழிக்கும் தொழில் என்ற நிலை தான் உள்ளது. சேவை என்ற நிலையில் இருந்து தாழ்ந்து வணிகம் என்ற நிலைக்கு மருத்துவம் சென்று நாட்கள் பலவாகி விட்டன.
மருத்துவ செலவுகள், மருந்துகளின் விலைகள் மற்றும் நமது அரசின் தனியார் மருத்துவமனைகளை ஆதரிக்கும் மனப்பாங்கு போன்ற விடயங்களால் இன்று நம் நாட்டினிலே மருத்துவம் என்றாலே அது பணம் இருப்பவர்களுக்கு மட்டும் என்ற நிலை உருவாகி விட்டது. இந்த நிலையினைத் தான் நாம் இங்கே கேள்விக்கு உள்ளாக்க வேண்டி இருக்கின்றது.

  மருத்துவ வசதி பெறுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவத்தினை வழங்க வேண்டியது ஒரு அரசின் தலையாயக் கடமைகளும் ஒன்று. அவ்வாறு இருக்க ஒரு அரசு அதன் கடமையை புறக்கணித்து விட்டு மருத்துவத்தினை தனியார் மயமாக்குவது என்பது எங்ஙனம் நியாயமாகும்? தனியாரிடம் மருத்துவம் இருப்பது தான் வளர்ச்சியா? போன்ற பல கேள்விகளை நாம் எழுப்பலாம். இக்கேள்விகளுக்கு பொது விடையாக நமக்குக் கிட்டுவது,

  "
அது எப்படிங்க அரசால எல்லாரையும் கவனிக்க முடியும்.
அரசால் தரமான மருத்துவ சேவையினை தர இயலாதக் காரணத்தினால் தனியாரிடம் அச்சேவைகளைக் கொடுக்கின்றது. மேலும் இலவசமாகவா மருத்துவத்தினைப் பெற முடியும்...அவ்வாறு இலவசமாகத் தந்தனர் என்றால் அம்மருத்துவர்கள் எங்கே செல்வர்...மேலும் ஒவ்வொரு மருத்துவ சேவைக்கும் ஒவ்வொரு வகையான கட்டணங்கள் இருப்பது சரியான ஒன்று தானே...அவ்வாறு இருக்கையில் நாம் இதனை எவ்வாறுக் குறை கூற முடியும்" என்பதே ஆகும்.

  அதாவது சுருக்கமாக காண வேண்டும் என்றால், ஒன்று...மருத்துவத்தினை அரசே அனைவருக்கும் தருவது என்பது இயலாதக் காரியம்...இரண்டு...இலவசமாக மருத்துவ வசதியினை மக்கள் பெறுவது என்பதும் முடியாத ஒரு காரியமே. இதுவே சிலரின் கூற்று.

   ஆனால் இவர்கள் எதனை முடியாதக் காரியம் என்றுக் கூறுகின்றனரோ அக்காரியங்களை பல்வேறு நாடுகள் வெற்றிகரமாக செய்துக் கொண்டு தான் வருகின்றன. கனடா, பிரான்சு, இங்கிலாந்து, கியூபா...போன்ற நாடுகளில் மருத்துவம் என்பது முழுக்க முழுக்க அரசின் பொறுப்பில் இருக்கும் ஒரு சேவையே ஆகும். அந்நாடுகள் அவர்களின் மக்களுக்கு மருத்துவத்தினை இலவசமாகத் தான் வழங்கிக் கொண்டு இருக்கின்றன. இப்பொழுது நாம் அவற்றைப் பற்றி விவரிக்கும் ஒரு ஆவணப் படத்தைத் தான் காணப் போகின்றோம்.

சிக்கோ: (Sicko)

  அமெரிக்காவில் மரம் அறுக்கும் தொழிலைச் செய்து கொண்டு வரும் நபர் ஒருவருக்கு ஒரு சிறிய விபத்தில் மோதிர விரலும் நடு விரலும் வெட்டுப்பட்டுப் போய் விடுகின்றன. எந்த ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் இல்லாத அவர் மருத்துவமனையினை அணுகுகின்றார்...வெட்டுப்பட்ட அவரது இரு விரல்களைத் தூக்கிக் கொண்டு.
Description: http://3.bp.blogspot.com/-38XzqXcZ9pQ/Uc_low-dyYI/AAAAAAAABZs/XVOW5xvgHr0/s299/sicko2.jpg
  மருத்துவமனையில் அவரைக் காணுகின்றனர்...மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏதும் இல்லை...இவர் தான் கட்டணத்தினைக் கட்ட வேண்டும்....'சரி இதோ நாங்கள் உங்களுக்கு தரும் வாய்ப்புகள்...உங்களின் மோதிர விரலை கையோடு இணைக்க வேண்டும் என்றால் ஆகும் செலவு 12,000 டாலர்கள்...அதுவே நடு விரல் என்றால் 60,000 டாலர்கள். முடிவு செய்து விட்டு சொல்லுங்கள்...நாம் ஆக வேண்டியக் காரியங்களை மேற்கொள்ளலாம்' (அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இல்லை என்றால் மருத்துவச் சேவையினைப் பெற நாம் தான் அனைத்துச் செலவையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.)

 கடினப்பட்டு 12000 டாலர்கள் சேர்த்து மோதிர விரலை மட்டும் சரிப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு திரும்புகின்றார் அவர்...ஒரு கேள்வியோடு....ஒரே கேள்வியோடு. "என் உடம்பிற்கு விலை நிர்ணயம் செய்கின்றனரே...இது சரியா?"

  இக்கேள்விக்கு விடையினைத் தேடித் தான் கிளம்புகின்றார் மைகேல் மூரே. (பாரன்ஹீட் 9/11 என்ற படத்தினை எடுத்தவர்). ஆனால் அவ்விடையினைத் தேடும் முன்னே அவருக்கு முன்னே இருக்கும் ஒரு முக்கியமான விடயத்தினை அவர் கண்டாக வேண்டி இருக்கின்றது. அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பான்மையானோர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருப்பவர்களே. ஒருவேளை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இல்லாததால் தானா அந்த மரம் அறுக்கும் நபரால் முழுமையான சேவையைப் பெற இயலாது போனது? என்பதே அவ்விடயம் ஆகும். அதனை பற்றித் தெளிவாக அறிந்துக் கொள்ள அவர் அமெரிக்காவில் உள்ள பல்வேறு மக்களிடம் அவர்களின் மருத்துவமனை அனுபவங்களைப் பற்றி விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கின்றார். அந்த விவரங்களின் மூலம் அவர் அறிந்துக் கொள்ள வருவது,

 1)
மருத்துவக் காப்பீடு இருந்தாலும்...செலவாகும் தொகையில் மருத்துவ சேவையினை எடுப்பவரும் ஒரு பங்கினை அவர் பக்கம் இருந்து கட்டத் தான் வேண்டும்.

 2)
பெரும்பாலும் மருத்துவ காப்பீட்டினை வழங்கும் நிறுவனங்கள் முழுமையான மருத்துவத் தொகையை வழங்குவதில்லை...ஏதாவது காரணம் கூறி தொகையினை வழங்காது இருக்கவே முயல்கின்றனர்.

 அதாவது மருத்துவ காப்பீட்டினை வழங்கும் நிறுவனங்கள் அக்காப்பீடுகளை மக்களின் சேவைக்கான திட்டங்களாகக் காணாது அதனை தங்களுக்கு இலாபங்களை ஈட்டுத் தரும் திட்டங்களாகவே பார்க்கின்றன என்பதனை அவர் அறிகின்றார். இதனைப் பற்றித் தெளிவாக அறிந்துக் கொள்ள அமெரிக்க மருத்துவத் துறையைப் பற்றி சிறிது அறிந்துக் கொள்வது நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.

 அமெரிக்கா என்பது தனியார்மயத்தை ஊட்டி வளர்க்கும் ஒரு தேசம் என்பதனை நாம் அறிவோம். அங்கே காப்பீட்டுத் துறையும் தனியார் வசம்...மருத்துவத் துறையும் தனியார் வசம். சரி...இப்பொழுது காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன?

  நமக்கு ஏதாவது எதிர்பாராத இழப்பு நேர்ந்து விட்டால் அதனை நாம் ஈடு கட்டிக் கொள்ள நமக்கு உதவும் ஒரு திட்டம் தானே. உதாரணத்திற்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது, ஒருவேளை எதிர்பாராத ஒரு விபத்து நமக்கு நேர்ந்து விட்டால் நம்முடைய குடும்பத்திற்கு உதவ வழி செய்யும் ஒரு திட்டம் தானே அது. அதற்கு நாம் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்கு பணம் செலுத்திக் கொண்டு வருவோம்.

  அதனைப் போன்று தான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமும். நமக்கு ஏதாவது மருத்துவ சேவை தேவைப்பட்டால் நமக்கு உதவ அந்த காப்பீட்டுத் திட்டத்தினை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு நாம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவுப் பணம் செலுத்திக் கொண்டு வர வேண்டும். அமெரிக்காவில் அத்தகைய மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்களே. நிற்க.

 இப்பொழுது அந்த நிறுவனங்கள் இலாபம் காண வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...

 1)
மக்களிடம் இருந்து அதிகமாக பணம் பெற வேண்டும்.

 2)
பெற்றப் பணத்தினை திரும்பத் தரும் நிலை எழக் கூடாது. அதாவது மக்கள் எவரும் மருத்துவச் சேவைக்கென்று பணத்தினைக் கோரக் கூடாது. ஒருவேளை மக்கள் பணத்தினை வேண்டினால் அதனை தராது தவிர்க்க வேண்டும்.

 அப்படி இருந்தால் தான் அவர்கள் இலாபத்தினைப் பார்க்க முடியும். அப்படித் தான் அந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று அந்த நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களே கூறுகின்றனர். அவர்களின் கூற்றின்படி,

 1)
அந்த காப்பீட்டுத் துறை நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வழிகளை தேடுவதற்கு மாறாக அவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்காது தவிர்க்கவே வழிகளைத் தேடுகின்றன. அவ்வாறு இழப்பீட்டினை வழங்காது தவிர்க்க உதவும் ஊழியர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வழங்கப்படுகின்றது.

 2)
ஒருவேளை ஒரு நபருக்கு கணிசமான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு விட்டால், எவ்வகையிலாவது அந்த நபருக்கு வழங்கப்பட்டத் தொகை தவறாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்று நிரூபிக்க முடியுமா என்றே அந்நிறுவனங்கள் பார்கின்றன. அதற்கென்று தனியாக ஊழியர்களும் இருக்கின்றனர். அவர்களின் பணி என்னவென்றால், நாம் ஒரு இழப்பீட்டுத் தொகையைக் கோரி இருக்கின்றோம் என்றால், அக்கோரிக்கையை செல்லாத ஒன்றாக ஆக்கி நமக்கு பணத்தினை மறுக்கும் வழியைக் கண்டுப் பிடிப்பதே அவர்களின் பணி ஆகும்.

 3)
இந்த நிறுவனங்களின் இப்போக்கிற்கு அரசாங்கமும் பக்க பலமாக இருக்கின்றது. காரணம் அரசில் பதவியில் இருப்பவர்கள் பலர் இந்நிறுவனங்களில் பங்குதாரர்களாகவும் பதவிகளை வகிப்பவர்களாகவும் இருக்கின்றனர். (இதனைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள படிக்கவும் இணைப்ப : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்)

  அதாவது மருத்துவத்தினை சேவையாகக் காணாது ஒரு வணிகமாகவே அந்நிறுவனங்கள் காணுகின்றன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றதுமைகேல் மூரே இதைப் பற்றித் தான் தன்னுடைய ஆவணப் படத்தினில் விரிவாக அலசுகின்றார். அவரின் அனுபவங்கள் மூலம் எவ்வாறு அமெரிக்க மருத்துவத்துறை வணிகமாக மாறி மக்களுக்கு தீங்கு விளைவிப்பதை அவர் அறிந்துக் கொள்கின்றார்.

 இப்பொழுது அவர் முன் இன்னொரு கேள்வி நிற்கின்றது. ஒரு வேளை மருத்துவம் என்பது இப்படித் தான் இருக்குமோ? இலவச மருத்துவம் என்பது இயலாத ஒன்றா? இக்கேள்விக்கு விடையினைத் தேடும் பொழுது தான் அண்டை நாடான கனடாவில் சென்று மருத்துவ சேவையினைப் பெற்றுக் கொண்டு திரும்பும் ஒரு அமெரிக்கப் பெண்மணியினைக் காணுகின்றார்.

 அப்பெண்மணி கனடாவில் சென்று மருத்துவ சேவை பெற்று வருவதற்கு காரணம் அங்கே மருத்துவம் இலவசம். முற்றிலும் இலவசம். மக்களிடம் இருந்துப் பெரும் வரிப்பணத்தின் மூலம் மக்களுக்கான சேவையான மருத்துவம் போன்றவைகளை அந்த அரசாங்கம் இலவசமாக வழங்குகின்றது. 'நீங்கள் யாராக இருந்தாலும் சரி...உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் சரி...நீங்கள் என் நாட்டினைச்    சார்ந்தவர் உங்களுக்கு மருத்துவ சேவையினை வழங்குவது இந்த நாட்டின் கடமை' என்றே அந்நாடு அதன் மக்களுக்கு மருத்துவத்தினை இலவசமாக வழங்கிக் கொண்டு இருக்கின்றது. சாதாரண காய்ச்சல் என்றாலும் சேவை இலவசம் தான்...புற்று நோய் என்றாலும் சேவை இலவசம் தான். அதிர்ந்து தான் போகின்றார் மூரே. பக்கத்து நாட்டில் கோடி கோடியாய் மக்கள் செலவு பண்ணி பார்க்கும் சேவைகள் இங்கே இலவசமாக வழங்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இதனைப் பற்றி ஒரு கனடா நாட்டினைச் சேர்ந்தவரிடம் பேசும் பொழுது,

 "
இலவச மருத்துவ சேவையை எவ்வாறு நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்கள்....ஒருவன் குறைந்த அளவு வரி கட்டுகின்றான்...நீங்கள் அதிகமாக வரி கட்டுகின்றீர்...இந்நிலையில் அவன் மருத்துவ சேவையை உங்களின் காசில் அல்லவா பெற்றுக் கொள்கின்றான்...மேலும் அவர்களின் பிரச்சனைக்கு நீங்கள் ஏன் உதவ வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்" என்ற கேள்விக்கு...

 "
முடியாதவர்களுக்கு முடிந்தவர்கள் உதவுவது சரியான ஒன்று    தானே...எனக்கும் அத்தகைய சூழ்நிலை உருவானால் நானும் அதைத் தானே எதிர்பார்ப்பேன்..." என்றே பதில் வருகின்றது. அருமையான பதில் தானே. ஒரு அருமையான ஆரோக்கியமான சமூகத்தினை அது காட்டுகின்றது. நிற்க.
Description: http://1.bp.blogspot.com/-lUGPQt6n3Cg/Uc_lzurg3aI/AAAAAAAABZ0/zczTC3Fku4I/s299/sicko1.jpg
  கனடாவினைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு மூரே செல்கின்றார்...இங்கிலாந்து...பிரான்சு...கியூபா போன்ற நாடுகளில் மருத்துவம் முற்றிலுமாக இலவசமாக இருப்பதனைக் காணுகின்றார். மேலும் அந்நாடுகளில் மக்களுக்கு இருக்கும் மருத்துவ சலுகைகள், வசதிகள் போன்றவைகளைப் பற்றியும் அவரது இந்தத் திரைப்படத்தில் விரிவாக கூறி இருக்கின்றார். அவற்றுள் சில,

 1)
அந்த நாடுகள் அனைத்திலும் மருத்துவம் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.
அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாகவே அம்மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

 2)
அனைத்து மருத்துவர்களும் அரசால் நியமனம  ெய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு சம்பளம் அரசாலேயே வழங்கப்படுகின்றது.

 3)
மருத்துவம் இலவசம் என்ற நிலையில் மருத்துவமனைகளில் பணம் கட்டும் தேவையே இல்லாது இருக்கின்றது. மேலும் ஒரு வேளை மருத்துவமனைக்கு மக்கள் வந்து செல்லும் செலவினை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள் என்றால் அச்செலவினை மருத்துவமனையிலேயே பெற்றுக் கொள்ளும் வசதியும் இருக்கின்றது. (அதாவது உடல் நலக் கோளாறுக் காரணமாக நீங்கள் மருத்துவமனை செல்ல 50 ரூபாய் ஆகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்...அதனை மருத்துவமனையிலேயே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்)

 4)
அமெரிக்காவில் 120 டாலருக்கு கிடைக்கும் மருந்து கியூபாவில்
  5 } சென்டுக்கு கிடைக்கின்றது. (அதாவது அமெரிக்காவில் 120 ரூபாய் என்றால் அதே மருந்து கியூபாவில் 5 பைசா). அதே போல் இங்கிலாந்தில் மருந்துகளுக்கு ஒரு குறைந்த கட்டணத்தினை நிர்ணயம் செய்து வைத்து இருக்கின்றார்கள். 6.65 பவுண்டினை செலுத்தி விட்டால் போதும் நமக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வாங்கிக் கொள்ளலாம். 10 மருந்து வாங்கினாலும் அதே விலை...100 மருந்து வாங்கினாலும் அதே விலை. சில நேரம் அவ்விலையினை நம்மால் தர இயலாத நேரம் இலவசமாகவும் மருந்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

 5)
மருத்துவ செலவுகள், நோயாளிகளின் இன்ன பிற தேவைகள் போன்றவைகள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே கவனிக்கப்படுகின்றன. வரி செலுத்துவதன் நோக்கம் அது தானே. நிற்க.

 அந்த நாடுகளில் இந்த நிலை நீடிக்க காரணம் என்று அம்மக்கள் கூறுவது அந்த நாட்டினில் மக்களைக் கண்டு அரசாங்கம் பயப்படுகின்றது. மக்கள் ஒன்றிணைந்து அந்நாடுகளில் போராடுகின்றனர்...எனவே அரசு மக்களுக்காக செயல்படுகின்றது.

 ஆனால் அமெரிக்காவில் மக்கள் அரசைப் பார்த்து அஞ்சுகின்றனர்...அதனால் அரசு அதன் கடமைகளை மறந்து மக்களுக்கு சேவை ஆற்றாமல் தனியார்கள் இலாபம் குவிக்க உதவிக் கொண்டு இருக்கின்றது. மருத்துவம் என்பது உரிமையாக இல்லாது பணம் இருப்பவர்கள் மட்டும் பெற்றுக் கொள்ளும் ஒரு பொருளாக மாறி விட்டது அதனால் தான். இந்நிலையில் அரசின் கடமைகளை அதற்கு வலியுறுத்தப் போகின்றோமா அல்லது உரிமைகளைப் பெறாமலேயே அச்சத்தில் வாழ்ந்து இருக்கப் போகின்றோமா என்பதே நமக்கு முன்னே இருக்கும் கேள்வி...என்றுக் கூறியே இந்த ஆவணப் படத்தினை முடிக்கின்றார் இயக்குனர் மூரே.

 இந்தியர்களாகிய நம் முன்னும் அக்கேள்வி தான் இருக்கின்றது...!!!

  கிட்டத்தட்ட இந்தியாவினை அமெரிக்க மயமாக்கும் அரசு முயன்றுக் கொண்டு இருக்கும் சூழலில் தான் நாமும் இருக்கின்றோம். அரசு தனது கடமைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு அனைத்தையும் தனியார்களின் கைகளுக்கு மாற்றித் தந்து கொண்டிருப்பதை நாமும் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம்.

  1)
அரசு மருத்துவமனைகள் பேணப் படாமல் தனியார் மருத்துவமனைகள் அரசில் பதவிகளில் இருப்பவர்களாலேயே தொடங்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் இருக்கின்றன.

  2)
போலி மருத்துவர்களும், மருந்துக்களும் வெறும் இலாபத்திற்காக நம்முடைய உடலினை பதம் பார்க்க காத்துக் கொண்டு இருக்கின்றனர். அரசு அதனைத் தடுக்க யாதொரு வழிமுறையையும் எடுக்கவில்லை.

  3)
மருத்துவம் என்றாலே செலவு அதிகம் ஆகும் என்றும் பணம் இல்லை என்றால் நமக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ள தகுதி இல்லை என்ற நிலையம் இன்று வளர்ந்துக் கொண்டு வருகின்றன.

 4)
அமெரிக்காவில் கொள்ளையடிக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களைப் போலவே இந்தியாவிலும் நிறுவனங்கள் தோன்ற ஆரம்பித்து இருக்கின்றன. அரசுகளும் அவற்றை ஊக்குவிக்கின்றன.

 கிட்டத்தட்ட மருத்துவம் என்பது வணிகமாகி விட்டு முடிந்த ஒரு சூழலில் தான் நாம் நிற்கின்றோம்...ஆனால் இதுவே முடிவு அல்ல. முடிந்தது என்று நாம் எண்ணும் வரை எதுவுமே முடிந்தது அல்ல. நாம் கட்டும் வரிகள் எவ்வாறு செலவு செய்யப்படுகின்றன என்று நமக்குத் தெரியாது....இருந்தும் தொடர்ந்து நாம் வரி செலுத்திக் கொண்டே இருக்கின்றோம்.

  இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போகின்றோம்? பொறுப்பினை செய்யாது இருக்கும் அரசைக் கண்டிக்கப் போகின்றோமா அல்லது அச்சத்தால் முடங்கியே கிடக்கப் போகின்றோமா?

  நம்முடைய பதிலில் தான் அடங்கி இருக்கின்றது நமது சமூகத்தின் நிலைமை...எதிர்காலம்!!!

என்ன செய்யப் போகின்றோம் நாம்???


கருத்துகள் இல்லை: