31/5/13

தோன்றாத் துணை

பெருமாள்முருகன் 
  என் அம்மா 02.12.12 அன்று காலை 7:20 மணிக்கு இறந்துபோனார். திருச்செங்கோட்டு நகரத்தை ஒட்டியுள்ள சானார்பாளையத்தில் மாரிக்கவுண்டர்பாப்பாயி ஆகியோரின் இளையமகளாகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அங்கிருந்து மூன்று கல் தொலைவில் உள்ள கூட்டப்பள்ளியில் மேட்டுக் காட்டு விவசாயிகளாகிய ராமசாமிபாவாயி ஆகியோரின் மகனான பெருமாள் என்பவருக்கு மனைவியாகிச் சாதாரண மனுசியின் கஷ்டங்களை எல்லாம் பட்டு வாழ்ந்து அப்படியே முடிந்தும் போனார் அம்மா.
ஆயுள் முழுக்கப் பட்ட கஷ்டம் போதாதென்று கடைசி காலத்தில் பார்கின்சன்ஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுச் சில ஆண்டுகளாகப் பெருந்துன்பம் அனுபவித்த அவர் ஒருவழியாக அதிலிருந்து விடுதலை பெற்றார். இறப்பைப் போல அவரது பிறப்பைத் துல்லியமாகச் சொல்ல முடியாது. தோராயமாகச் சொல்வதும் சிரமம் தான். அனுமானிக்கலாம்.
  அம்மாவுக்குத் திருமணம் நடந்தபோது பதினாறு, பதினேழு வயதிருக்கும். ஓராண்டுக்குப் பிறகு கருவுற்றார். கிராமத்தில் பிள்ளைப்பேற்றிற்காகக் கட்டாயம் மருத்துவமனைக்குப் போகும் வழக்கம் அப்போது வந்திருக்கவில்லை. பனிக்குடம் உடைந்து ஒருநாளாகியும் குழந்தை பிறக்கவில்லை. அம்மாவால் வலி பொறுக்கவே முடியவில்லை. பின்னர் இரக்கப்பட்டு மாட்டுவண்டியில் ஏற்றித் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். வயிற்றிலேயே குழந்தை இறந்திருந்தது. எப்படியோ அம்மா பிழைத்து வந்தார். முதல் குழந்தை, அதுவும் பையன். சரியான நேரத்தில் மருத்துவமனைக்குப் போயிருந்தால் தன் தலைச்சன் குழந்தையைக் காப்பாற்றி இருக்கலாம் என்னும் ஆதங்கம் எப்போதும் இருந்தது. அந்தக் குழந்தையின் முகத்தைக்கூட அம்மா பார்க்கவில்லையாம். அதன் பின் இரண்டாண்டுகள் கழித்து என் அண்ணன் பிறந்தான். ஒரு குழந்தை தான், இனிப் பிறக்கப் போவதில்லை என்று எல்லாரும் தீர்மானித்துவிட்டனர். அதை மீறி நான்கு ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன். அப்போது அம்மாவுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். எனக்கு இப்போது நாற்பத்தாறு. அப்படியானால் அம்மாவுக்கு இப்போது எழுபத்தொரு வயதிருக்கலாம். 1940 அல்லது 1941ஆம் ஆண்டு பிறந்திருக் கக்கூடும்.
  அம்மா பிறந்த மாதத்தைப் பெயர் கொண்டு அறிய முடிகிறது. அம்மாவின் பெயர் பெருமாயி. புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கே இந்தப் பெயரை வைப்பார்கள். என் அப்பனும் புரட்டாசியே. அவர் பெருமாள். பெருமாள்பெருமாயி எனப் பெயர்ப் பொருத்தம் நிறைவாகப் பெற்ற தம்பதியர். அப்பா பெருங்குடிகாரர். ஆனால் இருவருக்கும் பெயர் மட்டுமல்ல, பல்வேறு விஷயங்களிலும் இணக்கம் இருந்தது. மிகவும் அன்னியோன்யமானவர்கள். அம்மா அவரைப்பயாஎன்றுதான் அழைப்பார். அப்பன்பிள்ளஎன்றோபெருமாஎன்றோ கூப்பிடுவார். குடியால் குடல் வெந்திருந்த அப்பாவைக் காப்பாற்ற எவ்வளவோ பாடுபட்டும் முடியவில்லை. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோனார். அப்போதிருந்து தனி மனுசிதான். அம்மாவின் உலகம் நானும் என் அண்ணனுமாகிய எங்கள் குடும்பம் மட்டுமே. எங்கள் நலன் ஒன்றையே எண்ணி அதற்காக எல்லாம் செய்து வாழ்ந்தார்.
 
  அவருக்கு நினைவு தெரியும் முன்னரே தாயை இழந்துவிட்டார். அக்கா ஒருவர். இருவருக்கும் அம்மாயியின் (அவர்கள் அம்மாவின் அம்மா) அரவணைப்பு ஓரளவு இருந்துள்ளது. ஏனோ என் அப்புச்சி இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்புச்சி அப்போது பாரவண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். பெரும்பாலான நாட்கள் வண்டி ஓட்டிப் போய்விடுவார். பெரியம்மாவும் அம்மாவும் சுதந்திரமாக விளையாடித் திரிந்து வளர்ந்தனர். இன்றைய குழந்தைகள் நினைத்தே பார்க்க முடியாத பால்யவெளி அவர்களுக்குக் கிடைத்திருந்தது. கண்கள் சிவக்கச் சிவக்கக் கிணற்றில் நீச்சல் அடித்தனர். தலைமயிர் செம்பட்டை பூத்துப் பன்னாடை போலிருக்குமாம். இன்னும் எத்தனையோ விளையாட்டுக்கள். சீட்டில் ரம்மி விளையாடக்கூட அம்மாவுக்குத் தெரியும். என் பிள்ளைகளோடு போட்டியிட்டுச் சீட்டு விளையாடுவார். தாயக்கரத்தின் பலவித நுட்பங்கள் தெரியும். அம்மாவிடம் இருந்து தொற்றிக்கொண்ட தாய விளையாட்டு மீதான ஈடுபாட்டை என்னால் விடவே முடியவில்லை. தாயம் என்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அதில் இறங்கிவிடுவேன். என் அப்பனுக்கு எதிராக நான் விளையாடும்போது எனக்காக நாய் ஓட்டும் நுட்பத்தை அம்மா சொல்லித் தருவார். அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பள்ளிக்கூடம் பக்கம் தலைவைத்தும் படுத்ததில்லை. எப்படியோ எண்களைக் கற்றுக்கொண்டிருந்தார். நாட்காட்டி பார்க்கவும் கடிகாரம் பார்க்கவும் தெரியும். மனக்கணக்குப் போடுவதில் பெருந்திறமை. வரவு செலவில் பைசா தவறாது.
காடுமேடுகளில் திரிந்துகொண்டிருப்பதைத் தடுக்கத் திருச்செங் கோட்டில் கணக்குப்பிள்ளையாக இருந்த ஒருவரின் வீட்டு வேலைக்கு அம்மாவை அப்புச்சி கொண்டு போய்விட்டாராம். சில ஆண்டுகள் அங்கே வீட்டில் தங்கியிருந்தபடியும் வந்து போயும் வீட்டு வேலை செய்திருக்கிறார். அவர்கள் நன்றாக நடத்தினார்கள் என்றே சொல்வார். அம்மா இல்லாத பிள்ளையாக வளர்ந்தவர் வேலைகளைப் பொறுப்பாகச் செய்யக் கற்றுக்கொண்டது அங்கேதான் என்பார். பின்னர் திருச் செங்கோட்டு உணவகங்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றும் வேலையும் செய்திருக்கிறார். இளம் வயதில் நகரப் பகுதியில் வாழ்ந்த அம்மா திருமணத்திற்குப் பின் முழுதாகக் கிராமவாசியாகிவிட்டார்.
   மேட்டுக்காட்டு வெள்ளாமை பார்த்துக்கொண்டிருந்த பெரிய குடும்பத்தில் முதல் மருமகள். வீட்டு வேலைகளும் காட்டு வேலைகளும் என இரவுபகலாகப் பாடு. நான் பிறந்த பிறகு தனிக்குடித்தனம். எனக்குத் தெரிய அம்மா வேலை செய்யாமல் ஒரு நிமிடம்கூட இருந்ததில்லை. எந்த வேலையையும் தள்ளிப்போடுவது என்னும் பேச்சே இல்லை. வேலையைத் தவிர்ப்பதும் இல்லை. நினைத்தவுடன் வேலை நடந்துவிட வேண்டும். வெள்ளாடுகள், மாடு எருமைகள் ஆகியவற்றுடன் வெள்ளாமையையும் தனியாளாக நின்று பார்த்தார். என் அப்பன் சோடாக்காரர் ஆதலால் வெள்ளாமையில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. எல்லாம் அம்மாதான்வெள்ளாமையில் எல்லா வேலைகளும் அம்மாவுக்கு அத்துபடி. 1995ஆம் ஆண்டு விபத்து ஒன்று ஏற்பட்டது. எங்கள் காட்டுப் பாறையில் கடலைக்கொடி போர் வேய்ந்தார் அம்மா. மழை நீர் துளியும் இறங்காமல் அழகான வட்டப்போர் போடுவதில் அம்மா கெட்டி. அம்மா போரின் மீதிருந்து கொடி வேய அண்ணன் கீழிருந்து கொடி அள்ளிப் போட்டான். வேய்ந்து முடித்துக் கொண்டயத்தில் ஓலைகளைப் பரப்பிக் கூரையாக்கிவிட்டுக் கீழே இறங்கும்போது ஓலையில் வைத்த கால் வழுக்கி தலை குப்புறப் பாறைமீது வந்து விழுந்துவிட்டார் அம்மா. முதுகில் மொக்கை அடி. எழுந்து நடமாட முடியாமல் ஒருமாதம் மருத்துவமனையில் படுக்கையாக இருந்தார். பின்னரும் ஆறுமாத காலம் கிடை. மன வன்மையின் காரணமாகப் பிழைத்தெழுந்து படிப்படியாகப் பழையபடி வேலைகளைச் செய்யத் தொடங்கினார். ஏற்றம் இறைத்தல், ஏர் உழுதல், வண்டி ஓட்டுதல் உள்ளிட்ட எல்லாம் அம்மாவுக்குத் தெரியும். என் இளம்வயதில் அம்மா தூங்கி நான் பார்த்ததில்லை. எந்நேரம் படுப்பார், எந்நேரம் எழுவார் என்பதை அறிய முடியாது. என்றைக்காவது அலுத்துப் பகலில் கொஞ்ச நேரம் படுத்தார் என்றால் எனக்குப் பதற்றமாகிவிடும். அம்மாவுக்கு என்னவோ ஆகிவிட்டது என்று பயந்து போவேன். இயக்கமே அம்மா.
   நான் முழுமையாக அம்மா பையன். கூச்ச சுபாவியாகவும் தைரியம் அற்றவனாகவும் இருந்தேன். ஆகவே அப்பனின் முரட்டுத்தனமான அணுகுமுறை எனக்கு ஒத்து வரவில்லை. அம்மாவின் அர வணைப்பே பிடித்திருந்தது. பதினைந்து வயது வரைக்கும் அம்மாவுடன் படுத்துத்தான் தூங்குவேன். அம்மாவின் வயிற்றுக்குள் சுருண்டோ அம்மாவின் கால் மேல் என் கால்களைப் போட்டோ இறுகக் கட்டிக்கொண்டு படுத்தால்தான் தூக்கம் வரும். நடுஇரவில் சிறுநீர் கழிக்கப் போக வேண்டும் என்றாலும் அம்மா உடன்வர வேண்டும். பதினைந்தாம் வயதின்போதுஇன்னமே தனியாப் படுத்துக்கஎன்று சொல்லித் தனக்குப் பக்கத்திலேயே தனிக்கட்டில் போட்டுப்படுக்கப் பழக்கியதும் அம்மாதான். அம்மாவும் உடன் வந்தால்தான் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடித்திருக்கிறேன். மூன்றுகல் தொலைவில் இருந்த பள்ளிக் கூடத்திற்குத் தினமும் கூட்டி வந்து விட்டுப்போனார். பையன்கள் கேலிசெய்வார்கள். அப்படியும் அம்மாவை விட எனக்கு மனமில்லை. காட்டுக்குள் இருந்த எங்கள் வீட்டிலிருந்து சாலை வரைக்கும் வந்து அனுப்புவதைப் பழக்கமாக்கினார். கண்ணுக்கு எட்டாத தொலைவுக்கு நான் செல்லும்வரை சாலையிலேயே அம்மா நிற்பார். புளியமரங்கள் அடர்ந்த சாலையோரத்தில் என்னைப் பார்த்தபடி நிற்கும் அம்மாவின் தோற்றம் எனக்குள் இன்னும் பத்திரமாக இருக்கிறது.
  எனக்கு எத்தனையோ விஷயங்களைப் பொறுமையாகக் கற்றுக் கொடுத்தவர் அம்மா. கிணற்றில் நீச்சல் அடிக்கப் போகிறோம் என்று யாராவது சொன்னாலே எங்காவது ஓடி ஒளிந்துகொள்வேன். ஒருமுறை மேலே இருந்து கிணற்றுக்குள் தூக்கிப் போட்டுவிட்டார் அப்பன். அதனால் ஏற்பட்ட பயம் விலகவே இல்லை. எனக்குத் தைரியம் சொல்லி யாருமில்லாத கிணற்றுக்குக் கூட்டிப்போய் மெதுவாக நீச்சல் பழக்கிவிட்டார் அம்மா. சில நாட்களில் முருங்கைக்கட்டையைக் கட்டிக்கொண்டு அடிக்கும் அளவு தைரியம் வந்தது. அதன்பின் மற்றவர்களோடு சேர்ந்து நீச்சல் அடித்தேன். அப்போதும் எனக்காக வந்து கிணற்றுப் படிக்கட்டிலோ மேட்டிலோ உட்கார்ந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பார். நான் நன்றாகப் பழகும் வரை இது நடந்தது. இப் போதும் என் மனதில் பதிந்திருக்கும் அம்மாவின் சித்திரத்தில் ஒன்று குந்தவைத்துக் கிணற்று மேட்டில் உட்கார்ந்து என்னையே பார்த்திருக்கும் உருவம்.
எனக்குச் சைக்கிள் கற்றுக் கொடுத்ததும் அம்மாதான். என் வயதொத்த பையன்கள் சைக்கிள் ஓட்டிப் பழகிவிட்டார்கள். ஒன்பது வயதாகியும் சைக்கிளைக் கண்டாலே எனக்குப் பயம். அண்ணன் ஆறு வயதிலேயே பழகி விட்டான். அப்பனும் அண்ணனும் பிற பையன்களும் என்னைக் கேலி செய்வார்கள். எனக்கு அழுகையாக வரும். அம்மாவுக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது. தள்ளத் தெரியும். அப்போதெல்லாம் திருச்செங்கோடுஈரோடு சாலை ஆளரவமற்று இருக்கும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை வாகனம் ஏதாவது போகும். மட்ட மத்தியானத்திலும் நிலா இரவுகளிலும் அந்தச் சாலையில் சைக்கிளை அம்மா பிடித்துக் கொண்டு வர நான் குரங்குப் பெடல் போட்டுப் பழகினேன். சின்னக் காயம்கூடப் படாமல் சைக்கிள் ஓட்டக் கற்றவன் நானாகவே இருப்பேன். அம்மாவின் கற்பித்தல் அப்படி. நான் கற்றுக்கொண்டிருப்பதாகக் கருதும் ஒவ்வொரு விஷயத்தின் பின்னணியிலும் இப்படி அம்மா இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
   எனக்குப் பேருந்துப் பயணம் ஒத்துவராது. டீசல் நாற்றம் என் நாசியில் ஏறி உடனடியாக வாந்தி வந்துவிடும். எனக்காகப் பேருந்துப் பயணத்தைத் தவிர்த்து எங்கும் நடந்து செல்வதையே வழக்கமாக்கிக் கொண்டார். காய்ச்சல் வந்து கிடந்த என் பத்தாம் வயதில் பேருந்தில் வரமாட்டேன் என்று அடம்பிடித்த என்னை முதுகில் சுமந்தபடி ஐந்துகல் தொலைவு நடந்து மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றார் அம்மா. அப்பன் மாதாமாதம் கிருத்திகை நாளன்று பழனிக்குப் போவார். பேருந்து வாந்தியைத் தவிர்க்கப் பல முன் தயாரிப்புகளைச் செய்து அப்பனுடன் பழனிக்கு என்னை அனுப்பிப் பேருந்துப் பயணத்தைப் பழக்கத்திற்குக் கொண்டுவந்ததும் அம்மாதான்.
   யோசிக்கும் முறையும் எனக்கு அம்மாவிடம் இருந்து வந்ததுதான். ஒன்றை மருகிமருகிப் பல கோணங்களில் யோசிப்பார் அம்மா. எனினும் எதிர்காலம் பற்றி அச்சமும் ஏதாவது நடந்துவிடும் என்னும் பதைபதைப்பும் அம்மாவிடம் உண்டு. சிறு வயதில் அம்மா இறந்தது, அப்பாவின் கவனிப்பு ஒன்றும் இல்லாதது, நாற்பது வயதிலேயே கணவனை இழந்தது, வயிற்றிலேயே முதல் குழந்தை மடிந்தது, பொறுப்பெடுத்துச் செய்ய வேண்டிய வயதில் கடன் தொல்லையால் மூத்த மகன் தற்கொலை செய்துகொண்டது, நிலத்தையும் வீட்டையும் இழந்தது, சம்பாதித்த பணத்தை அப்பன் வீணாக்கியது என இறப்புகளும் இழப்புகளுமே அம்மா கண்டவை. ஆகவே நிம்மதியான தூக்கமே இல்லை. சிறுசத்தம் கேட்டாலும் எழுந்துவிடுவார். எழும்போதுஎன்றோஐயோஎன்றோ அலறுவார். ‘எதுக்கம்மா தீப்புடிச்சாப்பல எந்திரிக்கறஎன்று சொல்வேன். ஆனால் என் தூக்கமும் விழிப்பும் அம்மாவுடையது மாதிரியேதான்.
அம்மாவுக்கு எதையும் சிதைக்கத் தெரியாது. உருவாக்குதல் அவரது இயல்பு. எங்கள் குடும்பத்திற்காக அம்மாவால் இயன்றவற்றை உருவாக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். என் தந்தை இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் தந்தை இல்லாத குறையை உணராதவாறு எல்லாம் செய்து தந்திருக்கிறார். என் உயர்கல்வியின் பொருட்டுச் சில ஆண்டுகள் அம்மாவின் ரத்தத்தை உறிஞ்சியிருக்கிறேன் என்னும் குற்றவுணர்வு எப்போதும் என்னுள் இருக்கிறது. எந்தக் குறையும் இல்லாமல் நான் படிக்க வேண்டும் என்பதற்காகப் பல விஷயங்களை என்னிடம் இருந்து அம்மா மறைத்திருந்தார். பூர்வீக வீடு ஒன்றையும் நிலம் ஒன்றையும் விற்க நேர்ந்தபோது அம்மா அடைந்த துயரம் பெரிது. அதற்கு நிகரானவற்றை உருவாக்கிவிட வேண்டும் என்று அம்மா பட்ட கஷ்டமும் பெரிது.
  அம்மாவுக்கு எப்போதும் புதிய விஷயங்களில் தயக்கம் இருக்கும். தவிர்க்க முயல்வார். எடுத்துச் சொன்னால் அவற்றை எளிதாகக் கற்றுக்கொள்வார். எரிவாயு அடுப்பு வந்தபோது அதைப் பார்த்துப் பயந்தார். அதைக் கையாளும் முறையைச் சொல்லியபின் மிக எளிதாகக் கற்றுக்கொண்டார். ஊரில் தனியாக இருந்தபோது செல்பேசி வாங்கிக் கொடுத்தேன். அதைக் கையாளவும் கற்றுக்கொண்டார். வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு. நடிக நடிகையர்களைத் தெளிவாக அடையாளம் கண்டு சொல்லும் அளவுக்குத் திரைப்படத்தில் பயிற்சி உண்டு. பக்தியில் பெரிய பிடிப்பு இல்லை. எங்கள் குலதெய்வமான கரிய காளியம்மனை அவ்வப்போது வேண்டிக்கொள்வார். அத்தோடு சரி.
  நாங்கள் திரையரங்கம் ஒன்றில் சோடாக்கடை நடத்திக்கொண்டிருந்தோம். அங்கே வேலை செய்த பையன்கள் பலர் எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. என் கல்லூரி நண்பர்கள் பலர் வீட்டுக்கு வந்து போவதோ தங்கிச் செல்வதோ அவ்வப்போது நடக்கும். கல்லூரி ஆசிரியரான பின் வீட்டிற்கு என் மாணவர்களின் வரவு மிகுதி. இவற்றால் அம்மா சாதி பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டிருந்தார். யாரிடமும் சாதியை விசாரித்தது இல்லை. எல்லாருடனும் இயல்பாகப் பேசிப் பழகினார். வீட்டுக்கு வரும் யாரையும் மனம் நோகும்படி நடத்தியதில்லை. உணவளிக்க மறுத்ததில்லை. எனினும் சாதி அம்மாவிடம் இருந்து எங்கும் போய்விடவில்லை. ஆழ்மனதில் சாதிப் பிடிமானம் இருந்ததை நினைவற்றுக் கிடந்த இறுதி நாட்களில் கண்டேன்.
  அம்மாவுக்கு வாழ்வின் ஒரே நம்பிக்கையாக நான் மட்டுமே இருந்தேன். அதனால் என் திருமணம் அம்மாவுக்குப் பெரிய இடியாக இருந்தது. காதல், கலப்பு மணம் செய்துகொண்டேன். என் திருமணத்திற்கு வர அம்மா மறுத்துவிட்டார். அதுவும் அல்லாமல் இருந்த ஆடு மாடுகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே சில நாட்கள் முடங்கிக் கிடந்தார். அப்படியும் கௌரவம் விடவில்லை. ஏழு பவுனில் தாலிக்கொடி செய்து தருகிறேன் என்றார். ‘கலியாணத்துக்கே வர மாட்டீங்கற. தாலிக்கொடி எதுக்கு வாங்கித் தர்ற?’ என்று வன்மையாக மறுத்துவிட்டேன். அம்மாவோடு நான் முழுமையாக முரண்பட்ட ஒரே விஷயம் என் திருமணம்தான். சாதி மாறித் திருமணம் செய்கிறேன் என்பதைவிடத் தன்னை விட்டுப் போய்விடுவேன் என்பதுதான் அம்மாவின் பயம்.

  என் திருமணம் பற்றி எத்தனையோ கனவுகளை வைத்திருந்திருப்பார். சாதியில் பெண், பணக்காரப் பெண், ஆடம்பரமாகத் திருமணம் என்பன அவரது கனவுகளில் இருந்திருக்கும். அவை சிதைந்ததைவிடத் தன் ஒரே நம்பிக்கையும் கைவிட்டுப் போகிறது என்னும் அச்சம். அவ்வச்சத்தைப் போக்கும்படி என் நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டேன். அதன்பின் என் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தினார். எப்போதும் போல எல்லா விஷயங்களிலும் எனக்குத் துணையாக இருந்தார். ஒருபோதும்இப்படித் திருமணம் செய்துகொண்டாயேஎன்று கேட்டதேயில்லை. என் மாமனார் வீட்டுக்கும் ஓரிருமுறை சென்று வந்தார். தூரம் குறைவாக இருந்திருப்பின் சம்பந்தி வீட்டோடான உறவு வலுப் பெற்றிருக்கக்கூடும். என் அண்ணன் குழந்தைகளின் மீதான அன்புக்கு எந்த வகையிலும் குறையாமல் என் பிள்ளைகளின் மீதும் அன்பு காட்டி வளர்த்தார். இறுதி நாட்களில் என் மனைவியின் மீது அம்மா காட்டிய நேசம் ஆச்சரியப்படும்படி இருந்தது.
  அம்மாவின் கண்கள் எப்போதும் என் பின்னால் வந்துகொண்டேயிருப்பதை உணர்ந்திருக்கிறேன். நடை பழகும் குழந்தையைப் பின் தொடரும் தாயின் கண்கள். அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தும் உதறிவிட்டுத் தத்தி ஓடியும் நடை பயில்வது என் வழக்கம். ஓடி நின்று வெற்றிப் புன்னகை புரிந்ததும் உண்டு. கீழே விழுந்து பரிதாபப் பார்வை பார்த்ததும் உண்டு. தட்டிக் கொடுப்பதும் தூக்கி விடுவதும் அணைத்துக்கொள்வதும் ஆறுதல் தருவதும் என எல்லாச் சமயங்களிலும் எனக்குத் துணை அம்மா. இனியும் அப்படித்தான். தோன்றாத் துணை.
நன்றி- காலச்சுவடு &       பெருமாள்முருகன்.காம் 

கருத்துகள் இல்லை: