27/5/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-3

"கடவுள் சாதிய படைத்தாரப்பா...அவன் அவன் போன பிறவில பண்ணுன புண்ணிய பாவத்திற்கேற்ப உயர்ந்தவனாவும் தாழ்ந்தவனாவும் பிறக்கின்றான்...சரி தான" என்று சிலர் இன்றைக்கு நம்மிடையே இருக்கும் சாதிய அமைப்பிற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இப்பொழுது இவர்களின் இந்தக் கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.


இவர்களின் இந்தக் கூற்றினை நாம் காணும் பொழுது சில கேள்விகள் எழுவதனை தடுக்க இயலவில்லை. இவர்கள் சாதியினை இறைவன் படைத்ததாகக் கூறுகின்றனர். சாதிகள் என்பது தேவர், பள்ளர், பறையர், கவுண்டர், நாடார், வேளாளர், வன்னியர், நாயக்கர்,ஐயர....போன்றப் பிரிவுகள் ஆகும். இப்பிரிவுகளில் சில உயர்ந்தவைகளாகவும் சில தாழ்ந்தவைகளாகவும் இன்று இருப்பதனை நாம் காணுகின்றோம்.

இங்கே நம்முடையக் கேள்வி என்னவென்றால் இந்த இந்த சாதி உயர்ந்த சாதி இன்னின்ன சாதி தாழ்ந்த சாதி என்று இறைவன் கூறியதாக கூறும் இலக்கியமோ அல்லது வேறு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா? அவ்வாறு இல்லாத பொழுது எந்த அடிப்படையில் சாதிகள் ஏற்றத் தாழ்வுடன் அமைக்கப்பட்டன?

மேலும் இறைவனின் அருள் பெற்றவர்களாக அறியப்பெறும் சித்தர்கள் எதனால் சாதி ஏற்றத்தாழ்வினை எதிர்க்க வேண்டும்? இறைவன் சாதியினைப் படைத்து இருந்தான் என்றால் அவன் படைத்ததை எதற்காக சித்தர்கள் மறுக்க வேண்டும்?

"சாதியாவது ஏதடா?
சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?

காதில்வாளி, காரை, கம்வி, பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?"
-
ஆசான் சிவவாக்கியார்

"
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்ட ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு"
-
ஆசான் கொங்கணச்சித்தர்

மேலும் சரி சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மனிதன் இப்பிறவியில் சாதிகளில் பிறக்கின்றான் என்று கூறினால் மறுபிறப்பு என்பதே கிடையாது என்று சித்தர் கூறுகின்றனரே அது ஏன்?

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே

இவ்வாறு கேள்விகள் பல இருக்கின்றன...இவைகளுக்கு விடைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில் ஆகும். சாதிகள் அடிப்படையில் இறைவன் மனிதர்களைப் பிரித்தான் என்பதற்கு சான்றுகளே இல்லை.

"
அட என்னங்க பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று இறைவன் மக்களைப் படைத்தான் என்று வேதத்துல சொல்லி இருக்குல...அப்புறம் எப்படி நீங்க இறைவன் சாதியின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தான் என்பதற்கு சான்றுகளே இல்லை அப்படின்னு சொல்றீங்க" என்று சில நண்பர்கள் இங்கே கேள்விகள் கேட்கலாம். அவர்களுக்கு ஒரு கேள்வி...!!!

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பன சாதிகளா? அவைகளும் பள்ளர், வன்னியர், தேவர், நாடார், பறையர், செட்டியார் போன்றப் பிரிவுகளும் ஒன்றா?

இல்லை தானே. பிராமணன்,சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவைகள் வருணங்கள் எனப்படுபவை. அவைகளும் சாதிகளும் வெவ்வேறுப் பொருள் கொண்டவை. இன்னும் கூற வேண்டும் என்றால் நாம் மேலே கண்டுள்ள அனைத்து சாதிகளும் சரி மற்ற தமிழ் சாதிகளும் சரி அனைத்தும் சூத்திர வர்ணத்தின் கீழேயே வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் சாதிகளை இரண்டுப் வர்ணங்களுக்குள் அடக்கி விடலாம்...

ஒன்று ஐயர், ஐயங்கார் போன்றச் சாதிகள்...அவர்கள் பிராமண வர்ணத்தின் கீழ் சென்று விடுவர்.
பின்னர் பிராமணர்கள் அல்லாத மற்றவர்கள் அனைவரும் சூத்திர வர்ணத்தின் கீழ் வருவர் (சிலர் சற் சூத்திரர் எனப்படுவர்...சிலர் பஞ்சமர் வரிசையில் வருவர் அவற்றினைப் பற்றி நாம் பின்னர் விரிவாகக் காணலாம்).

"
எவ்வாறு தமிழர்கள் எல்லோரும் சூத்திர வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றுக் கூறுகின்றனர்...இங்கே பல நண்பர்கள் தாங்கள் ஆண்ட இனத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் தாங்கள் சத்திரியர்கள் என்றும் கூறுகின்றனரே...அவ்வாறு இருக்க அனைவரும் சூத்திரர்கள் என்றுக் கூறுவது எங்கனம் முறையாகும்" என்று இங்கே நண்பர்கள் சிலர் சில சந்தேகங்களை முன் வைக்கலாம்....!!!

இந்த கேள்விக்கு நாம் விடையினைக் காண முயல வேண்டும் என்றால் நாம் வர்ணங்களைப் பற்றியும் அவை தமிழ் சமுதாயத்திற்கு உரியனவா என்றும் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்றும் இறைவனின் வாயில் இருந்து வந்தவர்கள் பிராமண வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் இறைவனின் கையில் இருந்து வந்தவர்கள் சத்திரிய வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் இறைவனின் தொடையில் இருந்து வந்தவர்கள் வைசிய வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் இறுதியாக இறைவனின் காலில் இருந்து தோன்றியவர்கள் சூத்திர வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கருத்து நம் சமூகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது.

இப்பொழுது இந்தக் கருத்தினைத் தான் நாம் சில கேள்விகளுக்கு உள்ளாக்க வேண்டி இருக்கின்றது.

இறைவன் படைத்தான் என்று கூறுகின்றார்களே அதற்கு இலக்கியச் சான்றுகள் ஏதேனும் இருக்கின்றதா என்று நாம் வினவினால், சான்றுகள் வேதத்தில் இருக்கின்றது என்றே கூறுகின்றனர் (வேதங்கள் என்று அவர்கள் கூறுவது ரிக், யசுர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் ஆகும்). சரி வேதத்தில் இருக்கின்றதா என்று நாம் கண்டோமே என்றால் ரிக் வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அத்தகையக் குறிப்பு வருகின்றது. மற்றபடி வர்ணங்களைப் பற்றி வேறு எந்தக் குறிப்புகளும் அவர்கள் கூறும் வேதங்களில் இல்லை. அவ்வாறு இருக்க நமதுக் கேள்வி இங்கே என்னவென்றால் வேதங்கள் என்று இன்று வழங்கப்பெறும் நூல்களில் ஏன் இத்தகையக் கருத்தினை இடைச் செருகலாக சிலர் நுழைத்து இருக்கக் கூடாது? சரி அது இருக்கட்டும்... இப்பொழுது வேதங்களுக்கு வருவோம்...!!!

ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள் யாருக்கு உரியவை? இந்துக்களுக்கா? இன்று இந்துக்கள் என்றால் அவர்கள் சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்த மக்களே ஆவர். அவ்வாறு இருக்க அவ்வேதங்கள் அவர்களுக்கு உரியவை என்றால் அவர்களின் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் அவ்வேதங்களில் காணப்படவேண்டும் அல்லவா?

ஆனால் வேதங்கள் என்று இன்றுக் கூறப்படுபவைகளில், சிவன் என்றப் பெயரோ...கோவில் வழிபாடோ, சிவலிங்க வழிபாடோ, பெருமாள் வழிபாடோ, முருகன், பிள்ளையார், அம்மன் போன்ற தெய்வங்களின் பெயரோ எவையுமே காணப்படவில்லையே. மேலே நாம் கண்டவைகள் இல்லாது சைவ வைணவ சமயங்கள் கிடையாது. அவ்வாறு இருக்க ரிக், யசுர் சாம அதர்வண வேதங்கள் என்பன இந்துக்களுக்கு உரிய வேதங்கள் என்று எதனை வைத்துக் கூற முடியும்?

சிலர் ருத்திரன் என்ற பெயர் சிவனையும் விஷ்ணு என்றப் பெயர் பெருமாளையும் குறிக்கும் என்றுக் கூறினாலும், வேதத்தில் ருத்திரன் காற்றுக் கடவுளாகவும், விஷ்ணு வான் கடவுளாகவுமே குறிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதனை அவர்களால் மறுக்க முடியாது.

மேலும் தமிழர் கூறும் நான் மறை வேதங்கள் வேறு 'ரிக், யசுர்,ாம அதர்வண வேதங்கள்' வேறு என்று பல தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து கூறிச் சென்று இருக்கின்றனர். அவ்வாறு இருக்க தமிழர்களுக்கும் சரி தமிழர் கடவுள்களுக்கும் சரி சற்றும் தொடர்பில்லாத நூல்களில் ஏதோ ஒரு இடத்தில் 'இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாக படைத்தான்' என்று வந்து இருப்பதை எவ்வாறு தமிழர்களுக்கு உரியதாக நாம் கருத முடியும்?

மேலும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட புனித நூல்கள் என்றால் இறையருள் பெற்றச் சித்தர்கள் அவற்றை எதற்காக தாக்க வேண்டும் என்றக் கேள்வியும் இங்கே இருக்கின்றது...

இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.
- சிவவாக்கியர்

சரி ...சுருக்கமாக காண வேண்டும் என்றால்,

1)
இறைவன் மனிதனை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்பது இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவைகளில் உள்ள இடைச் செருகலே ஆகும்.
2)
அவ்வேதங்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
3)
சைவ வைணவ சமயங்களுக்கும் நான்கு வர்ணங்களுக்கும் தொடர்பு இல்லை என்றால் இந்திய மக்களுக்கும் அந்த வர்ணங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

அவ்வாறு மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கும் வர்ணங்களுக்கும் இந்திய மக்களுக்கும் தொடர்பில்லாத பட்சத்தில் எவ்வாறு சில சாதிகள் பிறப்பிலேயே உயர்ந்ததாகவும் சில சாதிகள் பிறப்பிலேயே தாழ்ந்ததாகவும் ஆகும்?

(
மேலே உள்ள கருத்துக்கள் வேறு தொடரில் விரிவாக விளக்கப்பட்டு இருப்பதனால் அதனை இங்கே விலாவரியாக கூறவில்லை. அக்கருத்துகளைப் பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் இப்பதிவுகளைப் படிக்கலாம்- முகப்பு(http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/blog-post.html) , வேதங்களும் சைவ வைணவமும்(http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/30.html), வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1 (http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/08/1_25.html))

சரி இருக்கட்டும்... இப்பொழுது வர்ணங்களுக்கும் இந்திய மக்களுக்கும் தொடர்புகள் இல்லை என்றுக் கண்டு இருக்கின்றோம்...ஆனால் அவ்வாறு நாம் கூறுவதற்கு நாம் மேலே கண்டுள்ள விடயங்கள் போதுமா என்றால் இல்லை என்றே பதில் வரும். அந்நிலையில் நாம் மேலும் சில விடயங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

வேதத்தில் ஒரே இடத்தில் வரும் வர்ணங்களைப் பற்றி விலாவரியாக பேசும் ஒரு நூல் நம்மிடையே இருக்கின்றது. அதைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

அட அதாங்க மனு நூல்....!!!

காண்போம்...!!!




Thanks-fb-திருக்குறள் / Thirukural , 26 மே

கருத்துகள் இல்லை: