13/5/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-2



சாதி என்றால் என்ன என்றும் சாதி ஏற்றத்தாழ்வுகள் எப்பொழுதில் இருந்து இருக்கின்றன என்றக் கேள்விக்கு இரு வகையான பதில்கள் வருகின்றன...

1)
சாதிகள் என்பது அவர் அவர்கள் செய்த தொழில்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அதாவது,


இன்று மருத்துவம் பார்ப்பவர் என்றால் - மருத்துவர் - மருத்துவ சாதி
பொறியியல் நிபுணர் என்றால் - பொறியாளர் - பொறியாள சாதி
ஓவியம் வரைபவர் என்றால் - ஓவியர் - ஓவிய சாதி

அதாவது சாதிகள் என்பவை தொழிற்பிரிவுகளே அன்றி வேறல்ல. ஆனால் பிற்காலத்தில் இவ்வகைப் பிரிவுகளை பிறப்பின் அடிப்படையில் மாற்றி சிலரைத் தாழ்ந்தவர் என்றும் சிலரை உயர்ந்தவர் என்றும் மாற்றி விட்டனர் என்பது ஒரு சிலரின் கூற்றாக இருக்கின்றது.

2)
சாதிகள் என்பன இறைவனால் படைக்கப்பட்டவை...இவர்கள் தாழ்ந்தவர்கள் இவர்கள் உயர்ந்தவர்கள்...இவர்கள் இந்த வேலையினைத் தான் செய்ய வேண்டும் என்பது அவன் வகுத்தப் பாதை...எனவே ஆதி முதலே சாதிகளும் ஏற்றத் தாழ்வுகளும் இங்கே இருந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இது மற்ற சிலரின் கூற்று.

இப்பொழுது இந்த இரு கூற்றுகளையும் பற்றி நாம் காணத் தான் வேண்டி இருக்கின்றது. முதலில் சாதிகள் என்பன தொழிற்பிரிவுகளாக இருந்தவை என்றக் கூற்றினைக் காண்போம்.

தொழில் அடிப்படையில் மக்கள் பிரிந்து இருப்பது என்பது வரலாற்றில் இயல்பான ஒன்றாகும். உதாரணத்திற்கு இன்றைய தொழிற் சங்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள்...ஒவ்வொரு தொழிலிற்கும் அந்தந்த தொழிலினைச் செய்யும் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட அமைப்புகள் தான் தொழிற் சங்கங்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சங்கம் என தொழில் அடிப்படையில் அவர்கள் பிரிந்து தான் இருக்கின்றனர்...ஆனால் சமூகத்தில் அவர்களின் நிலை சமமாகவே இருக்கின்றது.

அதாவது தொழில் வேறுபட்டாலும், தொழிற் குழுக்கள் வேறு பட்டாலும் அவர்கள் அனைவரும் சமூகத்தில் சமமாகவே இருக்கின்றனர். அவர்களுள் ஏற்றத் தாழ்வு வர வாய்ப்புகள் இல்லை.

"அட என்னங்க... இப்போ ஒருத்தர் மருத்துவராக இருக்காரு...இன்னொருத்தரு மருந்துச் சீட்டு எடுத்து தரவரா இருக்காரு...ரெண்டுமே தொழில் தான்.
ஆனா இதுல வேறுபாடு இருக்குள்ள...மருத்துவருக்கு தர மரியாதைய சீட்டு எடுத்துக் கொடுக்கும் தம்பிக்கு யாராவது தருவாங்களா? வித்தியாசம் இருக்குள்ள...அந்த வித்தியாசம் தான் காலப்போக்குல நிரந்திரம் ஆகி...மருத்துவர் ஒசந்த சாதி...சீட்டு எடுத்து கொடுக்குற தம்பி தாழ்ந்த சாதி அப்படின்னு வந்துருச்சி" என்று இங்கே சில நண்பர்கள் கருத்தும் கூறலாம்.

அவர்களுக்கு ஒரு கேள்வி..."அந்த சீட்டு எடுத்துக் கொடுப்பவரின் பிள்ளை மருத்துவராக படித்து தேர்ச்சிப் பெற்றால் அவர் ஒசந்த சாதியாக இருப்பாரா அல்லது தாழ்ந்த சாதியாகவே இருப்பாரா?"

தொழிலின் அடிப்படையில் ஒருவரின் தகுதி முடிவு செய்யப்படுகின்றது என்றால் அவர் உயர்ந்த சாதியாக இருக்க வேண்டும். இல்லை அவர் தாழ்ந்த சாதியாகத் தான் இருப்பார் என்றால் தொழில் அடிப்படையிலான பிரிவுகள் எங்கேயோ பிறப்பின் அடிப்படையில் மாற்றம் பெற்று விட்டன என்றே பொருள் வருகின்றது.

அத்தகைய ஒரு மாற்றம் இயல்பாக ஒரு சமூகத்தில் வந்திருக்க வாய்ப்பே இல்லை...இந்நிலையில் சாதிகள் எவ்வாறு பிறப்பின் அடிப்படையில் உருவாக்கம் பெற்றன என்றும் எக்காலத்தில் இருந்து அத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் நிலைப் பெறத் துவங்கின என்றும் நாம் காண வேண்டித் தான் இருக்கின்றது.

பொதுவாக நமது சமூகத்தின் எண்ணம் எவ்வாறு இருக்கின்றது என்றால் ஆதி முதல் இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வுகள் நம்முடைய சமூகத்தில் நிலவிக் கொண்டு தான் வருகின்றன என்று தான் இருக்கின்றது. ஆனால் இதனை மெய்ப்பிப்பதற்கு சான்றுகள் அரிதாகவே உள்ளன. அதுவும் குறிப்பாக கி.மு நூற்றாண்டுகளில் அத்தகைய சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்தமைக்கு சான்றுகள் மிகக் குறைவு. மாறாக அத்தகைய சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாததற்கே சான்றுகள் கிட்டப் பெறுகின்றன.

உதாரணமாக,

கி.மு நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் இந்தியாவினைப் பற்றி எழுதியக் குறிப்பில் இந்திய மக்களின் பிரிவுகளைப் பற்றி எழுதி உள்ளார். அவரின் குறிப்புகள் படி மக்களுள் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, மேலாக இன்றுப் பார்க்கும் பிரிவுகளும் அன்று நமது நாட்டினில் இருக்க வில்லை. அவரின் குறிப்பின் படி மக்கள் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

முதல் இடத்தில் தத்துவ ஞானிகள் இருந்தனர்.
இரண்டாம் இடத்தில் விவசாயிகள் இருந்தனர்.
மூன்றாம் இடத்தில் ஆடு/மாடு மேய்ப்பவர்கள் இருந்தனர்.
நான்காம் இடத்தில் வணிகர்கள் மற்றும் பொருள் செய்வோர்கள் இருந்தனர்.
ஐந்தாம் இடத்தில் போர் வீரர்கள் இருந்தனர்.
ஆறாம் இடத்தில் ஒற்றர்கள் இருந்தனர்.
ஏழாம் இடத்தில் அரசாங்க அலுவலர்கள் போன்றோர் இருக்கின்றனர்.

இந்தப் பிரிவுகள் இன்று நம்மிடையே காணப்படும் பிரிவுகளுக்கு முற்றிலுமாக வேறாக இருக்கின்றன.

இந்நிலையில் மெகஸ்தனிஸ் உண்மையினைக் கூறி இருக்கின்றாரா என்றும் அவர் அவ்வாறு உண்மையினைக் கூறி இருந்தால் எவ்வாறு மக்கள் பிரிவுகள் அவர் கூறிய நிலையில் இருந்து மாறி இன்றைக்கு இருக்கும் நிலைக்கு வந்து இருக்கின்றது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

சரி அது இருக்கட்டும். அதனைக் காணும் முன்னர் நாம் சாதிகள் எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்ற கேள்விக்கு 'கடவுள் அவ்வாறு படைத்தார்' என்று கூறுபவர்களின் கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது...

காண்போம்...!!! 
Thanks-12 மே –fb-திருக்குறள் / Thirukural
 

கருத்துகள் இல்லை: