23/4/13

ஈழத்தின் வரலாறு-10

இராசீவ் ஜெயவர்தனேஒப்பந்தம் . & மயிரிழையில் உயிர் தப்பிய இராசீவ்.
       இந்தியாவில் இந்திரா கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். அவருக்கு பின்னர் ராசீவ் காந்தி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டு இருக்கின்றார். காலம் 1984 ஆம் ஆண்டு. ஈழத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே இருந்தப் போராட்டம் மிகவும் தீவிரமானதொன்றாக மாறத் தொடங்கி இருந்தக் காலக்கட்டம்.


இலங்கையின் பிரதம மந்திரியாக ஜெயவர்தனே இருக்கின்றார். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களுள் விடுதலைப் புலிகள் முக்கியமானதொரு அமைப்பாக உருவாகி இருக்கின்றனர்.

யாழ்ப்பாண நூலக எரிப்பு (கிட்டத்தட்ட 90000 விலைப் மதிக்கப் பட முடியாத தமிழ் நூல்கள், ஏடுகள், சுவடிகள் போன்றவைகள் ஒரே இரவில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன), 1983 தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் (கருப்பு யூலை... கிட்டத்தட்ட 3000 தமிழர்கள் அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்டனர்) போன்றவைகள் சிங்களர்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருந்தன. பல்லுக்கு பல் இரத்தத்திற்கு இரத்தம் என்று அங்கங்கு தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் மோதல்கள் நிகழ்ந்த வண்ணமே இருந்துக் கொண்டு இருந்தன.

இக்காலத்தில் தான் இராசீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக வருகின்றார். இள வயது...இந்தியாவினை ஆசியாவில் வல்லரசான நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவு...வல்லரசென்றால் நம்மைச் சுற்றி இருக்கும் நாடுகள் அனைத்தும் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்...நாம் அவை அனைத்திற்கும் 'பெரிய அண்ணனாக' இருக்க வேண்டும்...சரி தானே..அந்த கண்ணோட்டத்துடன் தான் இலங்கையை அவர் பார்கின்றார்.

ஒரு சிறியத் தீவான இலங்கையில் பிரச்சனைகள் நிகழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் வல்லரசுக் கனவினைக் கொண்ட ஒரு பெரிய நாடு என்ன செய்ய வேண்டும்...சிறிய நாட்டின் பிரச்சனையினுள் தலையிட்டு அதனைத் தீர்த்து வைக்க வேண்டும்...அப்படிச் செய்தால் தானே அது வல்லரசான ஒரு நாடு என்றுப் பொருள் படும். அதையேத் தான் இராசீவும் செய்ய எண்ணுகின்றார்.

"என்னயா நடக்கின்றது அங்கே இலங்கையில்... தமிழர்கள் தனி நாடு கேட்கின்றார்களே...நாம் என்ன செய்வது" என்றவாறே அவர் சிந்திக்க அவரைச் சுற்றி இருந்தவர்கள் "சிங்களர்களை நம்ப முடியாது...ஆனால் அதே நேரம் தமிழர்களுக்கும் தனி நாடு கொடுக்கக் கூடாது...பின்னர் இந்தியாவிலும் அக்குரல்கள் எழும்பக் கூடும்....இரண்டுமே இந்திய நலன்களுக்கு மாறானவை...நாம் செய்ய வேண்டியது நிலைமையை பயன்படுத்திக் கொண்டு நமக்கு சாதகமான அரசினை, சூழலை இலங்கையில் இந்நேரத்தில் உருவாக்கிக் கொள்வதனை மட்டுமே..." என்றுக் கூற வல்லரசுக் கனவிலிருந்த இராசீவும் அவர்களின் கூற்றினை ஏற்றுக் கொண்டார். இலங்கையைக் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மாற ஆரம்பித்தது....மறைமுகமாக. மறைமுகமாக என்றால் அங்கே இந்திய உளவுத் துறை இல்லாமலா?

இலங்கை அரசியலுள் தனது மூக்கினை நுழைக்க ஆரம்பித்தது இந்திய உளவு அமைப்பான 'ரா (RAW)'. இன்றைக்கு இலங்கையில் உள்ள பிரச்சனைகள் பலவற்றுக்கும் இதுவே அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்பதனை வரலாறு நமக்கு காண்பிக்கின்றது.

சரி இருக்கட்டும்...இலங்கையின் மேல் இந்தியாவின் ஆதிக்கத்தை நிறுவுவதே இலக்கு என்று முடிவு செய்யப்பட்டதின் பின்னர் எவ்வாறு அதனை நடைமுறைப்படுத்துவது என்று பார்க்க வேண்டாமா...அதில் தான் இந்தியா முழு மூச்சாக ஈடுப்பட ஆரம்பித்தது.

'இரண்டுத் தரப்பினருக்குள்ளும் அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக் கொள்ளச் செய்யலாம்...ஆனால் அமைதி என்பது வெளிப்புற அமைதியாகவே இருக்க வேண்டும்...அதே நேரம் இலங்கையில் உள்ள பல்வேறு ஆயுதப் போராளிக் குழுக்களில் நம்முடைய எண்ணத்திற்கு யார் சரிப்பட்டு வருவார்களோ அவர்களுக்கு மறைமுகமாக ஆயுத உதவி செய்து அவர்களை வலுப்படுத்திக்கொள்ளலாம்...பின்னர் என்றாவது தேவை என்றால் அவர்களை நாம் நம்முடைய வசதிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்...இதன் மூலம் இலங்கையில் நம்முடைய பிடியை வலுவாகவே வைத்துக் கொள்ளலாம். மேலும் நம்முடைய இராணுவத்தின் ஒரு பகுதி இங்கே இருந்தால் நமக்கும் நலமாக இருக்கும். ஆம்...அவ்வாறே செய்யலாம்' என்று முடிவினை எடுத்துக் கொண்டு இலங்கையினை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது இந்தியா.

1987 ஆம் ஆண்டு இராசீவிற்கும் ஜெயவர்தனேவிற்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. (அந்த ஒப்பந்தத்தினைப் பற்றிப் பார்க்க இந்த இணைப்பினை சொடுக்கவும்)

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும். தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்கள் தங்களது ஆயுதங்களை இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். தமிழர்களுக்கென்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அங்கே தேர்தலின் வாயிலாக ஒரு அரசு அமைக்கப்படும். மேலும் அனைத்தும் நன்றாக நடக்கின்றனவா என்பதனை சரி பார்க்க இந்தியாவில் இருந்து ஒரு அமைதிப்படை அங்கே அனுப்பி வைக்கப்படும்.

தமிழர்களின் உரிமைக்காகவென்று போடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பாக யாருமே சேர்க்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

பிரபாகரன் இந்தியாவினை சந்தேகக் கண்ணோடு பார்த்தார். ஒப்பந்தத்தினை அவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் மூலம் தமிழர்களுக்கு நன்மை நேரும் என்ற நம்பிக்கை அவருக்கு வரவில்லை. இருந்தும் இராசீவ் காந்தி பிரபாகரனுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நம்பி, என்ன தான் நடக்கின்றது என்றுக் காண தயாரானார். அதனைப் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் யாழ்பாணத்தில் நிகழ்ந்த பொதுக் கூட்டத்தில் பிரபாகரன் பேசியதாவது...

"எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும், அதற்கான உத்திரவாதங்கள் பற்றியும் அவரிடம் (ராஜீவ் காந்தியிடம்) பேசினேன். பாரதப் பிரதமர், எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கைகளில் இறங்க இந்தியா அனுமதிக்கக் கூடாது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் சமாதானப் படையிடம் (இந்திய ராணுவம்) ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து (நேரத்திலிருந்து) எமது மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்” - என்று அறிவித்தார்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் ஆயினர்.

ஆனால் உண்மையில் இந்தியாவின் அந்த ஒப்பந்தத்தை பலர் அன்று சந்தேகக் கண்ணோடு தான் கண்டுக் கொண்டு இருந்தனர். பலருக்கு அது பிடிக்கவில்லை... தமிழர்களுக்கும் சரி...சிங்களர்களுக்கும் சரி. அதன் விளைவு தான் ராசீவ் இலங்கையில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடித்த நாளான 30 யூலை 1987 ஆம் ஆண்டு தெரிந்தது.

இராசீவை வரவேற்ற இலங்கை இராணுவ வீரர்களில் ஒருவன் தனது துப்பாக்கியினால் இராசீவை தாக்க முயன்றான். மயிரிழையில் உயிர் தப்பினார் இராசீவ். நல்லவேளை அணிவகுப்பில் கலந்துக் கொண்ட வீரர்களின் துப்பாக்கியில் குண்டுகள் போட்டிருக்கப்படவில்லை. மாறி போடப்பட்டு இருந்தாலோ அன்றே இராசீவ் கொல்லப்பட்டு இருக்கக் கூடும்.

ஆனால் ஏனோ தெரியவில்லை அந்த நிகழ்வினைப் பற்றி இன்று எந்தக் காங்கிரசுக்காரர்களும் பேசுவதில்லை....சிங்களர்களை அவர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

சரி இருக்கட்டும்...இந்தியாவில் இருந்து அமைதியினை காக்க படை வீரர்கள் இலங்கையில் இறங்கத் துவங்கி விட்டனர்...தமிழ் ஆயுதப் போராளிகள் தங்களின் ஆயுதங்களை ஒப்படைக்க துவங்கி விட்டனர்... அடுத்து என்ன நடந்தது/நடந்து இருக்கலாம்...காணலாம்...!!!

தொடரும்....!!!

பி.கு:

1) இக்கருத்துக்களில் தங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயைக் கூர்ந்து தெரிவிக்கவும். அது எனது சிந்தனையை செம்மையாக்க உதவும். வழக்கம் போல் உங்களின் கேள்விகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) தொடர்புடைய இடுகைகள்...
http://www.keetru.com/periyarmuzhakkam/feb09/vidhuthalairajendran.php
http://www.keetru.com/history/tamilnadu/rajiv_gandhi.php
http://en.wikipedia.org/wiki/Vijitha_Rohana


taken from fb thirukural


கருத்துகள் இல்லை: