3/3/13

இலங்கையில் சீனா

    சென்னை: இலங்கையில் சீனா கால்பதித்துவிட்டது என்று சொல்லிக் கொண்டு சிங்கள அரசுக்கு ஆதரவாக மத்திய அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த் தேசியவாதிகளும் பேசி வருகின்றனர். உண்மையில் இலங்கை வழியே சீனாவால் இந்தியாவுக்கு பேராபத்து காத்திருக்கிறதா? நிச்சயமாக ஒருபோதும் ஆபத்து வரவே வராது என்பதை உறுதியாகச் சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்...


முதலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் வருமா? என்பதைப் பார்த்தால் நிச்சயமாக இருநாடுகளிடையேயும் போர் வராது என்றே கூறப்படுகிறது. இருநாடுகளிடையே ஜம்மு காஷ்மீர எல்லையிலும் அருணாச்சல பிரதேச பகுதியிலும் பதற்றங்களும் முட்டல்களும் இருந்தாலும் இதற்கு அப்பால் இருநாடுகளுமே பொருளாதார நலன்களின் சீரான ஒத்துழைப்பை முதன்மையானதாகத்தான் கொண்டு வருகின்றன.

இந்தியா-சீனா உறவு
இதற்கு உதாரணமாக ஒரு விஷயம் சுட்டிக்காட்டப்படுகிறது. தென்சீனக் கடலில் வியட்நாமுடன் இணைந்து எண்ணெய் அகழாய்வுப் பணிகளை இந்தியா எடுத்துக் கொண்டிருந்தால் இந்தியா-சீனா இடையேயான உறவில் சிக்கல் உருவான அதே நேரத்தில் இன்னொரு நிகழ்வும் நடந்தது. இந்திய நிறுவனங்கள் சீனா வங்கியிடமிருந்து 1 பில்லியன் டாலர் வரை கடன் வாங்கிக் கொள்ள இந்திய நிதி அமைச்சகம் அனுமதி கொடுத்தது. நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மோதிக் கொண்டிருக்க நிதி அமைச்சகமோ நட்பு பாராட்டிக் கொண்டிருந்தது. இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு வர்த்தக உறவானது 2015-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலராக உயரக் கூடும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியா-சீனா இடையே நட்புறவு இப்படி இருக்கையில் இலங்கை-சீனா இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு என்பது இதில் 10-ல் ஒரு பங்கு அளவுக்குத்தான் இருக்கும்.

இந்தியாவும் சீனாவும் தெளிவாக இருப்பது ஒரேஒரு விஷயத்தில்தான் எனக் கூறப்படுகிறது. இவ்வளவு அரும்பாடுபட்டு உருவாக்கி வரும் பொருளாதார வளத்தை ஒரு போரின் மூலமாக ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கிவிடக் கூடாது என்பதுதான்! இதில் மிகக் கவனமாக இருப்பதும் சீனாதான்! இதனால்தான் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கும் பேச்சுவார்த்தையை நடத்துவார்களே தவிர இருநாடுகளிடையே போர் வந்துவிடாது..

சரி, எதற்காக இலங்கையை முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது சீனா? இந்தியாவை மிரட்டத்தானே.. தாக்குதல் நடத்ததானே...என்கிறீர்களா இல்லை..

சீனா-இலங்கை உறவு
சீனாவுக்கு முதன்மையான இப்போதைய ஒரே தேவை என்பது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருட்களை தமது நாட்டுக்கு எளிதில் எடுத்துச் செல்வது என்பதுதான். ‘எளிதில்' எடுத்துச் செல்வது என்பது ‘தரைவழி'யே எடுத்துச் செல்வது என்பதாகும். ஆனால் தற்போது வரை கடல் மார்க்கமாக மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டிய ஒரு நிலை சீனாவுக்கு இருக்கிறது. இப்படி தமது நாட்டுக்கு எரிபொருள் எடுத்துச் செல்லும் பாதையில் இடையூறு கூடாது என்பதற்காக இந்தப் பாதைகளில் உள்ள நாடுகள் அனைத்திலுமே கடற்படை தளங்களை அமைத்திருக்கிறது சீனா. அதாவது இந்தியாவை சுற்றிய அனைத்து நாடுகளிலும் தமது தளத்தை நிறுவியிருக்கிறது.இதுதான் முத்துமாலைத் திட்டம் என்பது. இதில் சீனா அதிகம் கண்டுகொள்ளாத முக்கியத்துவம் கொடுக்காத நாடுகளில் முதலிடமானது இலங்கைதான். மியான்மர், மாலத்தீவு, வங்கதேசம் போன்ற நாடுகளில் அனைத்திலும் கால்பதித்துவிட்டு கட்டக் கடைசியாகத்தான் அது இலங்கை"யையு"ம் தேர்ந்தெடுத்திருக்கிறது. அவ்வளவே!

இப்பொழுது இமயமலையின் காரோகாம் கணவாய் வழியாக பலுசிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை தரைவழியாக இணைக்கிற பாதையை போட்டுக் கொண்டிருக்கிறது சீனா. இது வெற்றிகரமாக முடிந்துவிட்டால் ‘சீனா' நிம்மதி பெருமூச்சுவிட்டுவிடும்.. இலங்கையை பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாது என்றே கூறப்படுகிறது.

இந்த ஒரு காரணம்தானா என்கிறீர்களா? இல்லை... சீனாவைப் பொறுத்தவரையில் உலக நாடுகள் எதனோடும் அது ஒரு ‘நிலையான கொள்கையை' ‘நிலையான நட்பை' கொண்டதே இல்லை என்பதே சரித்திரம்.. அதெப்படி சொல்ல முடியும்? ஈரான், ஈராக் விவகாரங்களில் சீனா எடுத்த நிலையைப் பார்க்கலாம்..

சீனா- ஈராக், லிபியா
1971-ம் ஆண்டு ஐ.நா. சபையில் சீனாவுக்கு நிரந்த உறுப்பு நாடு அந்தஸ்துக்காக குரல் கொடுத்தது ஈராக். ஆனால் அதே ஈராக், 1991-ம் ஆண்டு குவைத்தை ஆக்கிரமித்த போது மிகக் கடுமையாக வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்தது. அத்துடன் ஈராக்கின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து.அடுத்த 12 ஆண்டுகளில் மீண்டும் தமது நிலையை ஈராக் விவகாரத்தில் மாற்றுகிறது சீனா. 2003-ம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்க்கிறது சீனா. பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியாவுடன் இணைந்து பன்னாட்டுப் படைகள் வெளியேற வேண்டும் என்று குரல் கொடுத்தது ஈராக். ஆனால் எல்லாம் முடிந்து போய் அமெரிக்க ஆதரவுடன் புதிய ஈராக் அரசு அமைகிறது.. அந்த அரசிடமிருந்தும் எண்ணெய் ஒப்பந்தங்களை ஈராக்கால் பெற முடிகிறது. பல பில்லியன் டாலரை ஈராக்கில் முதலீடு செய்ய முடிகிறது. இதே கதைதான் போரில் சிதைந்த லிபியா.. லிபியாவின் சர்வாதிகாரியாக இருந்த கடாபிக்கு ஆயுதங்களை அதிகளவில் விற்பனை செய்தது சீனா. கடாபி அரசாங்கம் மூலம் பல முதலீடு செய்திருந்தது சீனா. லிபியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த போது அங்கு இருந்த பல்லாயிரக்கணக்கான சீனர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வரலாறு காணாத வகையில் பெரும் பியரத்னத்தில் ஈடுபட்டது சீனா. லிபியாவில் கதை முடிந்தது.. கடாபி கொல்லப்பட்டார்... அமெரிக்காவின் ஆதரவுடனான புதிய அரசு அமைந்தது. இப்போது என்ன நடந்திருக்கும்? ஈராக்கின் கதையைப் போலத்தான்.... சுமார் 50 பில்லியன் டாலருக்கான ஒப்பந்தங்களை புதிய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது சீனா.. சீனாவைப் பொறுத்தவரை தத்துவார்த்த நிலையா? தேச நலனா? எனில் தேச நலன் மட்டும்தான் அதற்கு முதன்மையானது....

சரிங்க இலங்கையைப் பற்றி என்ன சொல்ல வர்றீங்க?
இலங்கையின் தற்போதைய நிலைமை

இலங்கையில் இறுதிப் போர் முடிவடைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.. ஆனாலும் சர்வதேசத்தின் எந்த ஒரு யோசனையையும் ஏற்கக் கூடாது என்ற இறுமாப்பில் இன்னொரு கடாபியாக, சதாம் உசேனாக உல்லாசபுரியில் இருக்கிறார் மகிந்த ராஜபக்சே. அதே நேரத்தில் இலங்கையின் களநிலைமையானது எதிர்கால இலங்கையில் என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்கக் கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் இடதுசாரி ஆயுதப் போராட்டம் நடத்திய ஜே.வி.பி.யிலிருந்து ஒரு குழுவினர் குறிப்பாக தமிழரைத் தலைவராகக் கொண்ட குழு இயங்கி வருகிறது. இக்குழுவானது முந்தைய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளை தன்னுள் ஈர்த்து வருகிறது. இது ஆயுத வழிப்போராட்டமாக உருவெடுக்கவில்லை. இலங்கையில் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக தமிழ்-சிங்கள சமூகத்தினரால் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிற அரசியல் நிகழ்ச்சி சர்வதேசத்துக்கு எதிரான ராஜபக்சேவின் முரட்டுப் பிடிவாதம் அல்லது அகம்பாவ சம்பவங்கள் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டேபோக இலங்கையில் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரான தமிழ்- சிங்கள இனங்கள் இணைந்து குரல் கொடுப்பதான சம்பவங்கள் வேரூன்ற இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை தேசமானது இன்னொரு லிபியாவாக, ஈராக்காக, எகிப்தாக விஸ்வரூபமெடுக்கவே செய்யும்.. தற்போதைய அதன் இயங்கியல் போக்கின் வெளிப்பாடு அப்படியாகத்தான் அமையக் கூடும்...

இதை நாம் மட்டும் சொல்லவில்லை..
இலங்கை அதிபராக இருக்கும் ராஜபக்சேவும் கூட சொல்கிறார். இன்று ஹிந்து நாளிதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், மேற்குலக நாடுகள் எகிப்து, துனிசியா, லிபியாவில் செய்தது போல 'அரபு வசந்த'த்தை உருவாக்க முயற்சிக்கின்றன என்கிறார்....

சரியான யூகம்தான்..
இலங்கையும் அரபு வசந்தம் எனும் புரட்சியை எதிர்கொள்ளத்தான் போகிறது,, ஆனால் அப்போது அல்லோகலப்படக் கூடிய இலங்கை அரசை நிச்சயமாக சீன தேசம் காப்பாற்றாது.. மாறாக ஈராக்கிலும் லிபியாவிலும் செய்ததைப் போல இலங்கையில் பேரினவாத அரசு அகற்றப்படும் நிலையில் புதியதாக உருவாகக் கூடிய இலங்கை அரசுடனும் இணக்கமாக போக்கைக் கையாளும்..அனேகமாக மன்னாரில் எண்ணெய் அகழாய்வுக்கான ஒப்பந்தங்களைப் பெற்று அமைதியாக தமது தேசத்துக்கான வர்த்தக நலன்களைத் தொடரலாம்...என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..

ஈழத்தில் நார்வே
இதற்கான தெள்ளத் தெளிவான ஒரு உதாரணமாக அரசியல் பார்வையாளர்களால் சுட்டிக்காட்டப்படுவது நார்வேதான்.. நார்வேயைப் பொறுத்தவரையில் அமெரிக்காவின் மென்மை முகமாக அரசியலில் சொல்லப்படுவது வழக்கம்..

இந்த நார்வேயைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் மனங்களில் ஒரு நம்பிக்கை பாத்திரம் விதைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் சமாதானப் பேச்சுகளை முன்னெடுத்தவர்கள்.. தமிழீழப் பிரச்சனையை புரிந்து கொண்டவர்கள்.. கடைசிவரை தமிழீழத்துக்காக துணை நின்றவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. உண்மையில் அப்படியொன்றும் நார்வே செய்துவிடவில்லை.

என்ன செய்தது நார்வே?
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான்.. ஆனால் 2001-ம் ஆண்டே நார்வே இலங்கைத் தீவில் என்ன சாதித்தது தெரியுமா? மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் வளம் குறித்த அகழாய்வுப் பணிகளுக்காக ஒப்பந்தத்தைப் பெற்று ஆய்வும் மேற்கொண்டது. ஒரு பக்கம் சமாதானப் பேச்சுக்கான நடுநிலைப் பாத்திரம்.. இன்னொரு பக்கம் இயற்கை வளத்தை அள்ளிச் செல்ல ஒரு பாத்திரம்... என்ற வகையில்தான் நார்வே செயல்பட்டது. நார்வே இங்குமட்டுமல்ல.. எங்கெல்லாம் உள்நாட்டு யுத்தம் நடக்கிறதோ அங்கெல்லாம் இதைத்தான் நார்வே செய்து கொண்டிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..

இதைத்தான் சீனாவும் கையாள்கிறது.. இந்தியாவும் கையாள்கிறது.... எதிர்காலத்திலும் கையாளும்..
உண்மையில் இலங்கையில் சீனா காலூன்றி விட்டது..வேறவழியில்லாமல் ஆயுத பயிற்சி கொடுக்கிறோம்... அந்த உதவி செய்றோம்.. அப்படி தாங்குகிறோம் என்று சொல்லுகிற 'காங்கிரஸ்'வாதிகளுக்கும் தமிழர்களைக் கைவிட்டுவிட்டதால் சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து என்று சொல்லுகிற தமிழ்த் தேசியவாதிகளுக்கும் ஒரு உண்மை மட்டும் நன்றாக தெரியும்.....

அது 'ஆதிக்க' நாடுகள் காலம் காலமாக இன்னபிற தேசங்களைப் போலவே இலங்கை எனும் தேசத்தில் இப்போது தங்களது நலன்களுக்கான வலைவிரித்துக் காத்துக் கிடக்கின்றன என்பதுதான்!..

நன்றி :F-B[thirukural]

கருத்துகள் இல்லை: