28/1/13

ச[சா]தித் தீயில் நந்தினி

கடந்த
 21-ந்தேதி திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணி. ஈரோடு சிவகிரியில் சாலையோர
வயலில் பாதி எரியூட்டப்பட்ட நிலையில் ஓர் இளம்பெண்ணின் உடல் கிடக்க
காட்டுத் தீயாய் எரிய ஆரம்பித்து விட்டது சிவகிரி.


ஈரோடு எஸ்.பி. பொன்னி தலைமையிலான டீம் ஸ்பாட்டுக்கு பரபரத்து வந்து...
நெஞ்சுப் பகுதியிலிருந்து கால்கள் வரை எரிந்து போயிருந்த அந்த இளம்
பெண்ணின் இடுப்புப் பகுதிக்கு அருகில் கருகிய நிலையில் எடுக்கப்பட்ட
செல்போன் ஒன்றை கைப்பற்றி ஆராய்ந்ததில் இறந்திருந்த இளம்பெண் நந்தினி
என்றும், அவள் சிவகிரி கோட்டை காட்டுப்புதூரைச் சேர்ந்தவள் என்றும்,
கோவையில் படிக்கும் ஓர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி என்றும்
கண்டுபிடித்தது.

திரும்பவும் ஒரு கற்பழிப்புக் கொலையா? என செய்திகள் கிளம்ப
போஸ்ட்மார்ட்டத்திற்காய் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது
நந்தினியின் உடல்.

""தங்கம் மாதிரி வளர்த்த என் தங்கத்தை கொன்னுட்டாங்களே... ஞாயித்துக்கிழமை
காலையிலதானே சிவகிரியிலயிருந்து கோயமுத்தூருக்கு அவள பஸ் ஏத்தி விட்டோம்.
சாயந்தரம் அவகிட்ட நான் பேசும்போது கூட காலேஜ் ஹாஸ்டலுக்குள்ள
போய்ட்டேன்ப்பான்னு சொன்னாளே... ஆனா திங்கக்கிழமை காலையில இப்படி இந்த
சிவகிரியிலேயே செத்துக் கிடக்கறாளே... எப்படின்னு எனக்குப் புரியலையே...?''
 என நந்தினியின் அப்பா நல்லசிவம் அழுது குமுற...

""என்னடி உனக்காச்சு? நீ ஏன் எங்கள விட்டுட்டுப் போயிட்டே? உன்னைய இப்படி
செஞ்சவங்களுக்கு நாங்க தண்டனை வாங்கித் தராம விட மாட்டோம்டி...'' என
நந்தினியின் தோழிகள் கதறி அழுது தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் சிவகிரியில்... நந்தினியை கொலை செய்தவர்களைத் தண்டிக்கணும்...
என்று பொதுமக்கள் கடை அடைப்பு செய்து போராட்டம் நடத்த... கோவைக்கு வந்த
நந்தினியின் உடலை வாங்க மறுத்ததோடு "நந்தினியை கற்பழித்து கொலை செய்தவர்களை
 உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்றும் கோவை கலெக்டர் அலுவலகத்தை
முற்றுகையிட்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினார்கள் நந்தினி படித்த
கல்லூரியின் மாணவ, மாணவிகள்.

"கண்டிப்பாய் குற்றவாளிகளை கைது செய்வோம்...' என கோவை சிட்டி கமிஷனர்
விஸ்வநாதன் மாணவர்களுக்கு உறுதியளிக்க... கொங்கு நாடு முன்னேற்றக்
கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரனோ ""டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிப்பு
கொலை சம்பவத்தை விடவும் கொடுமையானது நந்தினியின் கொலை...'' என்று
சாலைமறியலும் செய்தார்.

இந்நிலையில் விசாரணைக்காய் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட அதில் ஒரு டீம்
நந்தினியின் கூடப் படிக்கும் கபிலன் என்ற மாணவனை தூக்கிக் கொண்டு வந்து
விசாரிக்க அவனோ... ""சார்... நந்தினிக்கும் எனக்கும் பழக்கம் தான். அவ கூட
மட்டும்தான் பேசணும், பழகணும்னு ஆயிரத் தெட்டு கண்டிஷன் போடுவா நந்தினி.
அதுனால நான் அவ கூட சண்டை போட்டுக்கிட்டு சில மாசமா சரியா பேசிக்கிற
தில்லை. இப்ப எங்க காலேஜ்ல மைசூருக்கு டூர் போன போது அவ வரலை. டூர்
போய்ட்டு திம்பம் வழியா ஞாயித்துக்கிழமை நைட்டு வந்துட்டு இருந்தபோது என்
போனுக்கு டவர் கிடைக்கலை.

திங்கள் விடியற்காலையில 4 மணிக்கு சரவணம்பட்டிய நெருங்கிட்டு
இருக்கும்போதுதான் அவகிட்டயிருந்து GOODBYE... ETHU NAAN UANKKU ANUPPURA
KATAISI SMS எஸ்.எம்.எஸ். எனக்கு வந்த போது அதிர்ச்சியாகிட்டேன். என்ன
பண்றதுன்னே தெரியாம அவ நம்பருக்கு அடிச்சேன். போன் சுவிட்ச் ஆப்
ஆயிருந்துச்சு. அவ்வளவுதான் சார் தெரியும். மத்தபடி எனக்கும் நந்தினி
கொலைக்கும் சம்பந்தம் கிடையாதுங்க சார்...'' என கண்ணீர் விட்டு
கதறியிருக்கிறான்.

அவள் கற்பழிக்கப்பட்டு பின் எரித்துக் கொலை செய்யப்பட்டாளா? அவளைக் கொலை
செய்தவர்கள் யார்? என நந்தினியின் உடல் போஸ்ட் மார்ட்டம் முடிந்த நிலையில்,
 தனிப்படைகளில் ஒரு விசாரணை டீம் அதிகாரிகளிடம் கேட்டோம். ""ரிப்போர்ட் படி

 நந்தினி கற்பழிக்கப்படவேயில்லை.

இந்தப் பொண்ணு லவ் பண்றது வீட்டுக்கு தெரிஞ்ச போது, அந்த கபிலன்
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்னு இந்த நந்தினியோட சொந்தக்காரங்ககிட்ட
செய்தி பரவின நிலையில... கவுண்டர் சாதியான அந்தப் பொண்ணோட வீட்டுல... "நீ
கேவலம் ஒரு எஸ்.சி. பையனையா கல்யாணம் பண்ணப் பாக்கறே'ன்னு கேட்க...
அப்பதான் அந்த பொண்ணு சொல்லியிருக்கு... "அவுரு ஒண்ணும் எஸ்.சி. கிடையாது.


அவுரு வன்னியர் சாதி'ன்னு சொல்லி சண்டை போட... "சரி வன்னியர்தானே... நம்ம
சாதி இல்லையல்ல... அவன் கூட இனிமே நீ பழகக் கூடாது. அப்படி நம்ம சாதி
விட்டு கல்யாணம் பண்ணித் தான் ஆவேன்னு நீ ஒத்தைக் கால்ல நின்னேனா...
குடும்ப கௌரவத்துக்கு வேண்டி உன்னைய கொலை பண்ணக்கூட நாங்க தயங்க
மாட்டோம்'னு மெரட்டியிருக் காங்க. அதோட லீவுல காலேஜ்ல ஏற்பாடு பண்ணின
டூருக்கு நீ போகக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காங்க.

ஏற்கனவே கபிலன் தன் கூட கோவிச்சுட்டு பேசமாட்டேங்கறானேங்கற விரக்தியோடும்,
கபிலன் டூருக்கு வருவான்ங்கறதாலேயே வீட்ல இருக்கறவங்க தன்னைய டூருக்கு
அனுப்பலைங்கற கோபத்தோடும் நந்தினி அந்தப் பையனுக்கு போன் போட்டபோது அந்தப்
பையன் எடுக்கவேயில்லை.

கடந்த சனிக்கிழமை கோவை காலேஜ் ஹாஸ்டல்லயிருந்து சிவகிரிக்கு வந்த நந்தினி
அடுத்தநாளு காலையில ஒரு பார்சல் கவரோட கோவைக்கு வர ரெடியாகியிருக்கா.
வழியனுப்ப வந்த அம்மாகிட்ட பேசிட்டு பஸ் ஏறின கொஞ்ச டைம்ல தொடர்ந்து
நந்தினியோட அப்பா பேசுன போன் கால்கள்ல... நான் கோவைய நெருங்கிட்டேன்னும்,
இதோ ஹாஸ்டலுக்குள்ள போய்ட்டிருக்கேன்னும் நந்தினி சொல்லியிருக்கா.

ஆனா நந்தினி அன்னைக்கு கோவைக்கு வந்து காலேஜ் வாசல்லயிருந்த கேட்
கீப்பர்கிட்ட அந்த பார்சல் கவரை தன்னுடைய ஃப்ரெண்டான தாரணிகிட்ட கொடுத்
துருங்கன்னு சொல்லிட்டு திரும்பவும் அங்கிருந்து சிங்காநல்லூர் பஸ்
ஸ்டாண்டுக்கு வந்திருக்கா.

அங்கிருந்து வெள்ளக்கோயிலுக்கு டிக்கெட் எடுத்துட்டு தாரணிக்கு
எஸ்.எம்.எஸ். பண்ணி... "நான் கேட்ல கொடுத்திருக்கற பார்சலை வாங்கி என்
கபிலன்கிட்ட குடுத் துரு'ன்னு சொல்லியிருக்கா. அந்த பார்சல்ல இருந்ததெல்
லாமே காதல் கடிதங்கள்தான். டூர்ல இருந்த கபிலனுக்கு... ரெண்டு மூணு
எஸ்.எம்.எஸ். இது லாஸ்ட் எஸ்.எம்.எஸ்.னு அனுப்பியிருக்கா. இதன்படி பார்த்தா
 நந்தினி தற்கொலை தான் பண்ணியிருக்கணும்'' என்கிறது ஒரு தனிப்படை டீம்.

ஆனால் வேறொரு கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கும் இன்னொரு டீமோ...
""கோவையிலிருந்து நந்தினி தன்னோட அக்காவான ரூபிணிகிட்டயும் பேசிட்டு
வெள்ளக்கோயில் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தபோது நைட்டு 9 மணி ஆகியிருக்கு. அப்ப
சிவகிரி போறதுக்கான கடைசி பிரைவேட் பஸ்ஸான ய.ங.ப.யில் ஏறி கண்டக்டரிடம்
எத்தனை மணிக்கு வண்டி எடுப்பீங்க?ன்னு இந்தப் பொண்ணு கேட்டிருக்கு. இப்போ
பத்து நிமிஷத்துல எடுத்துருவோம்னு கண்டக்டர் சொன்ன அடுத்த சில நிமிஷங்கள்ல
நந்தினி பஸ்ஸை விட்டு இறங்கியிருக்கா.

அதுக்கப்புறம் அந்த பஸ்ல நந்தினி ஏறவேயில்லை. இது அந்த பஸ் கண்டக்டரோட
தகவல். அதோடவே அவ போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கு. ஆனா வெள்ளக்
கோயில்லயிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலிருக்கற சிவகிரியில நந்தினி
செத்துக் கிடக்கறா. அது எப்படி? நந்தினிய யாராவது கடத்தியிருந்தாலும்
அவுங்களோட முதல் இலக்கே நந்தினியோட கற்பாத்தான் இருந்துருக்கும்.

ஆனா அவளோட கற்பு சூறையாடப்படலை. திருட்டுக்காக நடந்த மாதிரியும் இல்லை.

ஏன்னா அவ நகை கழுத்துலயேதான் இருக்குது. ஒருவேளை நந்தினி தற்கொலை பண்ற
மோட்டிவ்ல இங்க வந்திருந்தாலும் இந்த அர்த்த ராத்திரியில இவ்ளோ தூரம்
நடந்து இங்க வந்து இந்த வெட்டவெளியிலதான் மண்ணெண்ணெய் ஊத்தி தீ பத்த வச்சு
தற்கொலைப் பண்ணிக்குவாளா?

இந்த அர்த்த ராத்திரியில மண்ணெண்ணெய் எங்கே அவளுக்கு கிடைச்சது? அப்படியே
அவ தீ வச்சு தற்கொலை பண்ணியிருந்தா ஒடம்புல எரியற நெருப்பு சூடு தாங்காம
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் ஓடியிருக்க மாட்டாளா? "ஓ'வென அலறி இருக்க
மாட்டாளா? அப்படி அலறியிருந்தா 100 மீட்டர் தொலைவுல இருக்கற அரசு
மருத்துவமனையில இருக்கறவங்களுக்கு கேட்டிருக் காதா?

இல்லை... புரளும் போது பக்கத்துல இருக்கற செடிகள்ல தீ பட்டு செடிகள்
கருகியிருக்காதா? ஆனா நந்தினி உடல் ஒரே இடத்துல தூங்கறது போல கிடக்கிறதே?
அது எப்படி?

இது மாதிரியான கேள்விகளின் வலைக்குள் கிளைக் கதையா எங்களுக்கு சில
விஷயங்கள் கிடைத்தன. அதாவது வெள்ளக்கோயில்ல பஸ்லயிருந்து இறங்குன நந்தினிய
காதலை வெறுக்கும் சாதிவெறி பிடித்தவர்கள் எப்படியோ காரில் ஏற்றிக்
கொண்டுபோய் அவளோட ஹேண்ட் பேக்கோட சேர்த்து அவ மேல மண்ணெண்ணெய் ஊத்தி அவசரமா
 கொளுத்தி விட் டுட்டுப் போயிருக்கறாங்க. மண்ணெண்ணெய்ங்கறது னாலதான் உடம்பு
 முழுசா  எரியலை. இதுதான் முதல் கட்ட விசாரணையில எங்களுக்கு கிடைத்த தகவல்.
 ஆனால் நந்தினியைக் கொன்ற அந்த கும்பல் யார் என்பது இப்போதைக்கு
தெரியவில்லை. சீக்கிரம் அவர்கள் பிடிபடுவார்கள்'' என்கிறார்கள் அந்த
தனிப்படை வீரர்கள்.

நந்தினியின் இறப்பு கொலையா? தற்கொலையா? என ஈரோடு மாவட்ட எஸ்.பி.
பொன்னியிடம் கேட்டோம்.

""எங்களால் இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. தனிப்படை
டீம்களின் விசாரணையில் இருக்கிறது. இப்போது எதையும் அறுதியிட்டு கூற
முடியாது'' என்கிறார் பரபரப்புக்கிடையே.

மொத்தத்தில் காதலின்பால் சாதித் தீயில் நந்தினி மற்றவர்களால்
எரிக்கப்பட்டாளா? அல்லது காதலின் வேதனையில் தன்னைத்தானே நந்தினி எரித்துக்
கொண்டாளா? என்பது தான் நந்தினியின் இறுதிநாள் இரவு- இன்று வரை மறைத்து
வைத்திருக்கும் இரகசியம்.

 -அ.அருள்குமார் & ஜீவாதங்கவேல்
thanks:
www.pungudutivuswiss.com/2013/01/21-6.html
 



===========================================================================


 “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இனவெறி அல்ல. மாறாக தன் சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இன{or ஜாதி,மத‌}வெறி”.

=========================================================================




கருத்துகள் இல்லை: